ADDED : செப் 05, 2025 07:54 AM
எம்பெருமானே பல உருவங்களில் இந்த உலகினைத் தாங்கி நிற்கிறான். இவை படிப்படியாய் சொல்லப்படுகின்றன. மாபெரும் உருவமுடைய ஆமையாக நாராயணன் உலகைத் தாங்கி நிற்பது. அடுத்து எண்ணற்ற பணா மண்டலங்களையுடைய, அனந்தனாக இருப்பது. அடுத்து பூமாதேவியும், அதற்கு மேலாக தர்ம, ஞான, வைராக்ய ஐஸ்வர்யம் என்ற பீடக்கால்களும், அதர்மம் முதலான நான்கு கால்களும் நடுவில் சதாசிவனும் கைகூப்பிய வண்ணம் காட்சி தருகிறான்.
இடையே முறையாக இந்திரன், அக்னி, எமன், நிர்ருதி, வருணன், வாயு. குபேரன், ஈசானன் என்ற எண்மர், குமுதன், குமுதாக் ஷன், புண்டரீகன், வாமனன், சங்குகர்ண ஸர்வநேத்ர ஸுமுகன். ஸுப்ரதிஷ்டன் என்னும் கண நாயகர்களும், நவக்ரஹ தேவதைகளும் எந்த்ரரூபமாகவும், ரிக், யஜூர், சாம, அதர்வண வேதமூர்த்திகளும், சத்வ, ரஜோ, தமோ குண ரூபங்களும். த்வாரபாலகர்களும் அஞ்சலித்த கையராய் காட்சி தருகின்றனர்.
அற்புதமாக அமைக்கப் பெற்ற திவ்யரத்ன, கசிதமான, பொன்மயமான திருமாமணி மண்டபத்தில், கிரீட மகுட கேயூர ஹார, கடிகாதி ஸர்வாபரணஷிதராய், பொற்றாமரை மலரில், பொற்றாமரையாளுடன் பத்ராசனத்தில் த்ரிகோண பீடத்தில் ஸ்ரீ லட்சுமி ஹயக்ரீவன், சேவை சாதிக்கிறான்.
எம்பெருமான் எழுந்தருளியுள்ள பர்யங்கத்தைச் சுற்றிலும், சாமரமேந்தி கைங்கர்யம் பண்ணும் அஷ்ட சக்திகள், சுதர்சன, பாஞ்சசன்ய, கதாபத்ம சார்ங்காதி திவ்யாயுதங்கள், தக்ஷிணபாகத்தில் ப்ரும்ம, விஷ்ணு, ருத்ராதிகள், வடக்கே சனக, சநந்தன, சனக்குமாரர்கள், மேற்கில் துர்கை, விக்னேசர், நாரதர், முன்பே அஸ்மத்குருப்யோ என்னும்படியான ஆசார்யர்களையும், சேவித்து எம்பெருமானுடைய முழுமையான, முறையான இன்னருளைப் பெறவேண்டும் என்பதனை ஸ்ரீபாஞ்சராத்ர ஆகம ஸ்ரீப்ரச்ன சம்ஹிதை மிக விரிவாக உரைக்கிறது.
அந்த ஸ்லோகங்களின்படி, தர்மாதி பீடத்தைச் சுற்றிலும் அந்தந்த தேவதைகள், நித்ய சூரிகளின் ஸ்வரூபத்தோடு அமைக்கப் பெற்றிருக்கிறார்கள். முன் சொன்னவாறு ஸ்ரீலலட்சுமி ஹயக்ரீவரின் பரிபூர்ணமான திருவருளும், தெள்ளறிவும், சேவித்த மாத்ரத்திலேயே கிடைக்கும்.