/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
மாவட்டத்தில் போதை மாத்திரை விற்பனையில் திண்டிவனம் முதலிடம்: விற்பனையை முற்றிலும் தடுக்க எஸ்.பி., நடவடிக்கை எடுப்பாரா ?
/
மாவட்டத்தில் போதை மாத்திரை விற்பனையில் திண்டிவனம் முதலிடம்: விற்பனையை முற்றிலும் தடுக்க எஸ்.பி., நடவடிக்கை எடுப்பாரா ?
மாவட்டத்தில் போதை மாத்திரை விற்பனையில் திண்டிவனம் முதலிடம்: விற்பனையை முற்றிலும் தடுக்க எஸ்.பி., நடவடிக்கை எடுப்பாரா ?
மாவட்டத்தில் போதை மாத்திரை விற்பனையில் திண்டிவனம் முதலிடம்: விற்பனையை முற்றிலும் தடுக்க எஸ்.பி., நடவடிக்கை எடுப்பாரா ?
ADDED : ஜன 02, 2025 07:01 AM

திண்டிவனம்: விழுப்புரம் மாவட்டத்தில் போதை மாத்திரை விற்பனையில் புகலிடமாக திண்டிவனம் பகுதி இருப்பதால் போலீசார் கூடுதல் கவனம் செலுத்தி, போதை மாத்திரை விற்பனையை முற்றிலும் தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொது மக்கள் மத்தியில் கோரிக்கை எழுந்துள்ளது.
தமிழகத்தில் போதை மாத்திரை, கஞ்சா, தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனையை தடுக்க வேண்டும் என்று அனைத்து கட்சியினரும் அரசிற்கு கோரிக்கை வைத்து வருகின்றனர். இதில் விழுப்புரம் மாவட்டத்தில் மற்ற இடங்களை விட, திண்டிவனம் உட்கோட்ட பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள், கஞ்சா, மருத்துவத்திற்கு பயன்படுத்தப்படும் வலி நிவாரணி மாத்திரையை போதை மாத்திரையாக பயன்படுத்துவது நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது.
இதில் திண்டிவனம் பகுதிகளில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை வாடிக்கையாளர்களுக்கு டோர் டெலிவரி செய்யும் அளவிற்கு முன்னேற்றம் கண்டுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன், திண்டிவனம் சஞ்சீவராயன்பேட்டையில் ராஜஸ்தானை சேர்ந்த ஒருவர் வீட்டில் 26 மூட்டைகளில் பதுக்கி வைத்திருந்த குட்கா போதை வஸ்து பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
இதேபோல் திண்டிவனம் பஸ் நிலைய பகுதி, ரயில்வே நிலையம் அருகில், தீர்த்தக்குளம் மேம்பாலம் பகுதி, ரோஷணை பகுதி என அனைத்து இடங்களிலும் கஞ்சா பொட்டலங்கள் விற்பனை தொடர்பாக போலீசார் தொடர்ந்து கைது செய்தும், கஞ்சா விற்பனையை கட்டுப்படுத்த முடியவில்லை. கடந்த ஒரு மாதத்தில் மட்டும், திண்டிவனத்தில் போதை மாத்திரை விற்பனை தொடர்பாக 5 க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவாகி, சம்பந்தப்பட்ட இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மாவட்டத்தில் மற்ற இடங்களளை விட திண்டிவனம் பகுதி போதை மாத்திரையின் தலைநகரம் போல் செயல்பட்டு வருகின்றது. கடந்த 20ம் தேதி திண்டிவனம் காவேரிப்பாக்கம் ஏரிக்கரை அருகே போதை மாத்திரை விற்பனைதொடர்பாக 4 இளைஞர்கள் கைது செய்யப்பட்டு, அவர்களிடமிருந்து 90 மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டது. இதேபோல் கடந்த 28 ம் தேதி ஆஸ்பிட்டல் ரோடு பகுதியில் போதை மாத்திரை விற்பனை தொடர்பாக இரண்டு பேர் கைது செய்யப்பட்டு, 100 மாத்திரைகள், சிரஞ்சு, ஸ்டெர்லைட் வாட்டர் ஆகியன பறிமுதல் செய்யப்பட்டது.
கைது செய்யப்பட்ட அனைவரிடமிருந்து அறுவை சிகிச்சைக்கு பயன்படும் வலி நிவாரணி மாத்திரை பறிமுதல் செய்யப்பட்டது. இந்த மாத்திரைகள் பெரிய மருத்துவமனைகளில் அறுவை சிகிச்சை செய்து கொள்பவர்களுக்கு வலி தெரியாமல் இருப்பதற்காக பயன்படுத்தப்படுகின்றது.
இந்த மாத்திரைகள் மெடிக்கல் ஷாப்பில் விற்பனை செய்வது இல்லை. மருத்துவர் பரிந்துரை இல்லாமல் யாரும் விற்பனை செய்ய முடியாது. இந்த மாத்திரைகளை விற்பனை செய்யும் இளைஞர்கள், போலியாக மருத்துவரின் சீட்டை தயாரித்து, ஆன்லைன் மூலம் புக் செய்து, கூரியர் மூலம் திண்டிவனத்திற்கு கொண்டு வந்து விற்பனை செய்கின்றனர்.
திண்டிவனம் பகுதியில் போதை மாத்திரைகளை, இளைஞர்கள் பலம் சுத்மான தண்ணீரில் கலந்து, ஊசி மூலம் நரம்பில் ஏற்றிக்கொண்டு போதையில் தள்ளாடுகின்றனர். ஒரு மாத்திரை நுாறு ரூபாய்க்கு வாங்கி, ரூ.300க்கு போதை மாத்திரை என்று கூறி இளைஞர்களிடம் விற்பனை செய்கின்றனர்.
திண்டிவனம் பகுதியில் போலீசாரால் பிடிபடும் இளைஞர்கள் மீது வழக்கு பதிவு செய்து, சிறையில் அடைக்கின்றனர். ஆனால் பிடிபட்ட இளைஞர்கள் எங்கிருந்து அந்த மாத்திரைகளை வாங்கி விற்கின்றனர். அவ்வாறு மருத்துவர்கள் பரிந்துரை இல்லாமல் விற்பவர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுப்பதில்லை என்று பொது மக்கள் தரப்பில் குற்றம் சாட்டுகின்றனர்.
படித்த இளஞைர்களின் வாழ்க்கையை சீரழித்து வரும் போதை மாத்திரை விற்பனை, திண்டிவனம் பகுதியிலுள்ள பெற்றோர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் மாவட்டத்திற்கு புதியதாக பொறுப்பேற்க உள்ள சரவணன் எஸ்.பி., திண்டிவனம் பகுதிகளில் சர்வ சாதாரணமாக போதை மாத்திரை விற்பனை செய்யப்படுவதை முற்றிலும் தடுக்க கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் மத்தியில் கோரிக்கை வைக்கின்றனர்.