/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
விழுப்புரம் நகரமன்ற கூட்டத்தில் கவுன்சிலர்கள் அதிருப்தி: அடிப்படை பணிகள் நடக்கவில்லை என குற்றச்சாட்டு
/
விழுப்புரம் நகரமன்ற கூட்டத்தில் கவுன்சிலர்கள் அதிருப்தி: அடிப்படை பணிகள் நடக்கவில்லை என குற்றச்சாட்டு
விழுப்புரம் நகரமன்ற கூட்டத்தில் கவுன்சிலர்கள் அதிருப்தி: அடிப்படை பணிகள் நடக்கவில்லை என குற்றச்சாட்டு
விழுப்புரம் நகரமன்ற கூட்டத்தில் கவுன்சிலர்கள் அதிருப்தி: அடிப்படை பணிகள் நடக்கவில்லை என குற்றச்சாட்டு
ADDED : டிச 24, 2024 06:22 AM

விழுப்புரம்: விழுப்புரத்தில் நீண்டகாலமாக உள்ள பாதாள சாக்கடை பிரச்னை மற்றும் கனமழையால் சேதமடைந்த சாலை, கால்வாய்களை சீரமைக்க வேண்டும் என நகர் மன்ற கூட்டத்தில் கவுன்சிலர்கள் வலியுறுத்தினர்.
விழுப்புரம் நகர மன்ற கூட்டம், தலைவர் தமிழ்ச்செல்வி பிரபு தலைமையில் நடந்தது. கமிஷனர் வீரமுத்துக்குமார், துணை தலைவர் சித்திக் அலி மற்றும் கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் நடந்த விவாதம்:
புருஷோத்தமன், சாந்தாராஜ்: பெஞ்சல் புயல் கனமழையால், சாலாமேடு, பெரியார் நகர் சுற்றுப்பகுதி 3 வார்டு குடியிருப்புகளில் தேங்கிய மழை நீர் வெளியேற வழியின்றி நிற்கிறது. அதனை அகற்றவும், எதிர்காலத்தில் மழை பாதிப்பிலிருந்து மீள் வதற்கு அப்பகுதியில், வடிகால் வாய்க்கால் ஏற்படுத்த வேண்டும், சேதமடைந்த சாலைகளை உடன் சீரமைக்க வேண்டும்.
நவநீதம் மணிகண்டன்: பின் தங்கிய 13வது வார்டில், கடந்த ஒன்றரை ஆண்டுகளாக எந்த ஒரு திட்டங்களும் நிறைவேற்றவில்லை. குறிப்பாக நந்தனார் தெரு, நாயக்கன் தோப்பு பகுதியில் பாதாள சாக்கடையும், வாய்க்கால்களுடன் சாலை அமைத்து தர வேண்டும். வார்டில் துப்புரவு பணிகளை முழுமையாக மேற்கொள்ள வேண்டும்.
இளந்திரையன்: ராகவன்பேட்டையில் சேதமடைந்த சாலைகளையும், பாதாள சாக்கடை மேன் ஹோல்களையும் சீரமைக்க வேண்டும், முக்கிய வீதிகளில் சிமெண்ட் சாலை அமைக்க வேண்டும்.
மணவாளன்: நமது நகராட்சியின் பொறுப்பு இன்ஜினியர் கனமழை மீட்பு பணிக்கு கூட வரவில்லை. 6 மாதமாகியும் கூட்டங்களுக்கும் வருவதில்லை. அடிப்படை, அத்தியவசிய பணிகளை கூட நகராட்சி அதிகாரிகள் வந்து செய்வதில்லை. 42 வார்டுகளிலும் மழை நீரை வெளியேற்றினால் மட்டும் போதாது, சேதமடைந்த சாலை, பாதாள சாக்கடை கட்டமைப்பு உள்ளிட்ட அடிப்படை பணிகளை செய்ய வேண்டும். கடந்த 2 ஆண்டுகளாக பாதாள சாக்கடை, சாலை பிரச்னை தீர்க்கப்படாமல் உள்ளது. அதனை செயல்படுத்துபவர்களும் அலட்சியமாக உள்ளனர்.
மழை பாதித்த பகுதிகளில் அதிகாரிகள் ஆய்வு செய்யவில்லை. இந்த அரசுக்கு அவப்பெயரை ஏற்படுத்துகின்றனர்.
மணி: வார்டுகளில், கவுன்சிலருக்கு தெரியாமல் திட்டங்கள் நிறைவேற்றப்படுகிறது.
நெடுஞ்செழியன்: காகுப்பம் பகுதியில், பாதாள சாக்கடை வழிந்து ஊருக்குள் தேங்கும் பிரச்னையை தீர்க்க வேண்டும்.
இம்ரான், சிவா: வாய்க்கால் சீரமைக்காததால் தான், கனமழையில் நாராயணன் நகர், கணபதி நகர், வள்ளலார் நகர், சிங்கப்பூர் நகர் என பல குடியிருப்புகளில் மழைநீர் தேங்கி நிற்கிறது. வாய்க்கால் ஆக்கிரமிப்புகளை அகற்றி சீர் செய்ய வேண்டும், 42 வார்டுகளிலும், பாதாள சாக்கடை பிரச்னை, சாலை வீணாகியுள்ளதை சீர்படுத்த வேண்டும்.
சசிரேகா: எங்கள் வார்டில் உள்ள பிரச்னைகள் தீர்க்க பல மனுக்கள் கொடுத்தும் நடவடிக்கை இல்லை. ஊரல்கரைமேடில் கழிவு நீர் தேங்கி 100 குடும்பத்தினர் பாதித்துள்ளனர்.
கோல்டு சேகர்: 1வது வார்டில் குப்பை, கழிவுகள் பொது இடத்தில் கொட்டப்படுகிறது. எல்.இ.டி. தெரு மின் விளக்குகள் அமைக்கவில்லை. பன்றிகள் தொல்லை தொடர்கிறது. அதிகாரிகள் அலட்சியமாக உள்ளனர்.
சேர்மன் தமிழ்ச்செல்வி: நகராட்சி பொறுப்பு என்ஜினியரை, நானே பார்க்கவில்லை. நகரில் பாதாள சாக்கடை பிரச்னை அதிகரித்துள்ளது. 42 வார்டு பிரச்னைகளுக்கும், நாங்கள் தான் அலைந்து பணியாற்றுகிறோம். அதிகாரிகள் சரியாக வருவதில்லை.
நிரந்தர பொறியாளர் விரைவில் அமர்த்த கோரியுள்ளோம். அதிகாரிகளை எச்சரித்து, அனைத்து பணிகளிலும் கவனம் செலுத்தப்படும்.