/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள மாவட்ட நிர்வாகம் தயார்: அனைத்து துறையினரும் ரெடியாக கலெக்டர் அறிவுரை
/
வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள மாவட்ட நிர்வாகம் தயார்: அனைத்து துறையினரும் ரெடியாக கலெக்டர் அறிவுரை
வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள மாவட்ட நிர்வாகம் தயார்: அனைத்து துறையினரும் ரெடியாக கலெக்டர் அறிவுரை
வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள மாவட்ட நிர்வாகம் தயார்: அனைத்து துறையினரும் ரெடியாக கலெக்டர் அறிவுரை
ADDED : ஆக 20, 2024 05:23 AM
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில், வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள பாதுகாப்பு மையங்கள், உபகரணங்கள் ரெடியாகியுள்ளதால், அனைத்துத்துறையினரும் களப்பணிகளை மேற்கொள்ள தயாராக வேண்டும் என்று கலெக்டர் அறிவுறுத்தியுள்ளார்.
விழுப்புரம் மாவட்டத்தில், வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடு பணிகள் தொடர்பாக, அனைத்துத்துறை அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம், கலெக்டர் பழனி தலைமையில் நடந்தது. இதில் கலெக்டர் ஆலோசனை வழங்கி பேசியதாவது:
விழுப்புரம் மாவட்டத்தில், வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ளும், முன்னேற்பாடு பணிகள் தொடர்பாக கடந்த 2ம் தேதி நடந்த ஆய்வுக்கூட்டத்தில், அனைத்துத்துறைகளிலும் மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்து எடுத்துரைக்கப்பட்டு, பணிகள் முடுக்கிவிடப்பட்டது.
அதன்படி கலெக்டர் அலுவலகத்தில் பருவமழை முன்னெச்சரிக்கை தகவல் அளிக்கும் கட்டுப்பாட்டு அறை செயல்படவுள்ளது. பேரிடர் காலங்களில் மீட்பு பணி மேற்கொள்ள, காவல்துறை, தீயணைப்புத்துறை, பேரிடர் மீட்பு படை, ஊர்காவல் படை, தேசிய மாணவர் படை ஆகியோர் தயார் நிலையில் உள்ளனர். திண்டிவனம், விழுப்புரம் கோட்டாட்சியர் அலுவலகங்கள் மற்றும் அனைத்து தாலுகா அலுவலகங்களிலும் கட்டுப்பாட்டு அறையில் 24 மணி நேர சுழற்சி பணிக்கு அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
மாவட்டத்தில் பேரிடர் காலங்களில் பாதிக்கக்கூடிய 122 இடங்கள் கண்டறியப்பட்டு, அப்பகுதிகளின் வழித்தடங்களை தயார் செய்து வைக்கப்பட்டுள்ளது.
கடந்தாண்டு வடகிழக்கு பருவமழை ஏற்பட்ட முன் அனுபவம் மற்றும் இடர்பாடுகளின் நினைவில் கொண்டு எதிர்வரும் பருவமழை காலத்தில் தகுந்த முன்னேற்பாடு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
நீர் நிலைகள், குட்டைகள்,ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு வருவதுடன், நீர்நிலைகளில் உடைப்புகள் சரிசெய்யப்பட்டு வருகின்றன. அனைத்து பேரிடர் பாதுகாப்பு மையம் பள்ளிகள் போன்றவற்றில் மக்கள் தங்க வைக்கும் அனைத்து இடங்களிலும் அடிப்படை வசதிகள் தயார் நிலையில் உள்ளன. அனைத்து வட்டார வளர்ச்சி அலுவலகங்களிலும் தேவையான மணல் மூட்டை, மரங்கள், பவர் பம்புகள், விளக்குகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
பாம்பு உள்ளிட்ட விஷ பூச்சிகள் பிடிப்பதற்கும் பாம்பு பிடிப்பவர்களின் விவரங்களை தயார் நிலையில் உள்ளனர். லாரிகள், டிரக், ஜே.சி.பி, டிராக்டர்கள், மரம் அறுக்கும் இயந்திரங்கள் தயார் நிலையில் உள்ளன.
பொதுப்பணித்துறை சார்பில் பாசன வாய்க்கால்களின் கரைகளை ஆய்வு செய்து, சேதமடைந்துள்ள பகுதிகள் சரி செய்யும் பணி நடந்து வருகிறது. அனைத்து சுகாதார நிலையங்களில் நடமாடும் வாகனங்கள், ஆம்புலன்ஸ்கள் தயார் நிலையில் உள்ளன. பாம்பு கடிக்கு தேவையான மருந்துகள் மற்றும் போதிய அளவில் மருத்துவர்கள் தயார் நிலையில் உள்ளன.
மின்கம்பங்கள் மற்றும் மின்சார உபகரணங்களை தேவையான அளவு இருப்பு வைக்கப்பட்டுள்ளன. தாழ்வாக தொங்கும் மின்சார கம்பிகள் ஆய்வு செய்து சீரமைக்கப்பட்டுள்ளன.
வெள்ள பாதிப்பின்போது பணியாற்ற நீச்சல் தெரிந்த வீரர்களின் பட்டியலை தயார் நிலையில் உள்ளன. 12 பல்நோக்கு புயல் பாதுகாப்பு மையங்களும் தயார் நிலையில் உள்ளன.
எனவே, வடகிழக்கு பருவமழை காலங்களில், அனைத்துத்துறை அலுவலர்களும் தங்களுக்கான பணிகளை சிறப்பாக மேற்கொள்ள தயாராக வேண்டும் என்றார். கூட்டத்தில் டி.ஆர்.ஓ., பரமேஸ்வரி, கூடுதல் கலெக்டர் ஸ்ருதஞ்ஜெய்நாராயணன் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்துகொண்டனர்.