/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
ஏரியின் நடுவே சாலை அமைத்து தி.மு.க.,வினர் அலப்பறை மக்கள் போராட்டத்தால் பணி நிறுத்தம்
/
ஏரியின் நடுவே சாலை அமைத்து தி.மு.க.,வினர் அலப்பறை மக்கள் போராட்டத்தால் பணி நிறுத்தம்
ஏரியின் நடுவே சாலை அமைத்து தி.மு.க.,வினர் அலப்பறை மக்கள் போராட்டத்தால் பணி நிறுத்தம்
ஏரியின் நடுவே சாலை அமைத்து தி.மு.க.,வினர் அலப்பறை மக்கள் போராட்டத்தால் பணி நிறுத்தம்
ADDED : செப் 03, 2025 01:28 AM

விழுப்புரம்:விழுப்புரம் அருகே தி.மு.க., பிரமுகர்களின் நிலத்திற்கு செல்ல ஏரியில் சாலை அமைத்ததை மக்கள் தடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
விழுப்புரம் அருகே உள்ள அய்யூர்அகரம் கிராமத்தில் பாசனத்திற்கு பயன்படும், 600 ஏக்கர் பெரிய ஏரி உள்ளது. இந்த ஏரியில் திடீரென புதிதாக சாலை அமைக்கும் பணி நடந்தது. இதையறிந்த விவசாயிகள், பொதுமக்கள் நேற்று காலை, 10:00 மணிக்கு அங்கு சென்று, இயந்திரங்களையும், பணியாளர்களையும் தடுத்து, போராட்டத்தில் ஈடுபட்டனர்.
விழுப்புரம் தாலுகா போலீசார், 'தாசில்தார், பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து, விதிமீறல் குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்' என, உறுதியளித்தனர். இதையடுத்து, பொதுமக்கள் கலைந்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறியதாவது:
அய்யூர் அகரம் ஏரியில் ஒரு வாரமாக புதிதாக சாலை அமைக்கும் பணி நடந்து வருகிறது. ஏதோ கரையை பலப்படுத்தும் பணி நடப்பதாக நினைத்திருந்தோம். ஆனால், ஏரியின் நடுவில் விதிமீறி சாலை போடுவதற்காக இயந்திரங்கள் கொண்டு மண் எடுத்து, சாலைக்கான கட்டமைப்பை ஏற்படுத்தி வருகின்றனர்.
இது தொடர்பாக, தாசில்தார், பொதுப்பணித்துறையினர், வி.ஏ.ஓ.,விடம் கேட்டபோது, அவர்களுக்கே விபரம் தெரியவில்லை. எவ்வித தகவலுமின்றி சிலர் சாலை போடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இப்பகுதி தி.மு.க., பிரமுகர்களின் உத்தரவில், ஏரி அருகே உள்ள தி.மு.க.,வினர் சிலரது நிலத்திற்காக ஏரி வழியாக சாலை அமைக்கப்படுவதாக ஊழியர்கள் கூறுகின்றனர்.
அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறி னர்.