/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
தர்பூசணி குறித்த தவறான தகவலை நம்ப வேண்டாம்: தோட்டக்கலை அதிகாரி தகவல்
/
தர்பூசணி குறித்த தவறான தகவலை நம்ப வேண்டாம்: தோட்டக்கலை அதிகாரி தகவல்
தர்பூசணி குறித்த தவறான தகவலை நம்ப வேண்டாம்: தோட்டக்கலை அதிகாரி தகவல்
தர்பூசணி குறித்த தவறான தகவலை நம்ப வேண்டாம்: தோட்டக்கலை அதிகாரி தகவல்
ADDED : மார் 30, 2025 11:23 PM

வானுார்; சுவைக்காக ரசாயனங்களை ஊசி மூலம் தர்பூசணியில் செலுத்துவதாக நிலவி வரும் தகவலை யாரும் நம்ப வேண்டாம் என மாவட்ட தோட்டக்கலை அதிகாரி அறிவுறுத்தியுள்ளார்.
கோடை காலத்தில் குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய நீர்ச்சத்து நிறைந்த பழம் தர்பூசணி. தற்போது தமிழகத்தில் தர்பூசணி குறித்து சில வதந்திகள் பரவி வருவதால் விவசாயிகள் பெரிதும் பாதிப்படைந்து வருகின்றனர்.
தமிழக அரசு ஆணைப்படி, மாவட்ட தோட்டக்கலை அதிகாரிகள் தர்பூசணி, பயிரிடப்படும் தோட்டங்களுக்கு நேரடியாக ஆய்வு மேற்கொண்டு விவசாயிகளிடம் கலந்துரையாடி வருகின்றனர்.
விழுப்புரம் மாவட்ட தோட்டக்கலை துணை இயக்குனர் அன்பழகன், வானுார் அடுத்த ரங்கநாதபுரத்தில் பயிர் செய்யப்பட்டுள்ள விவசாய நிலத்தில் ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது அவர் கூறுகையில், 'விழுப்புரம் மாவட்டத்தில் 3,500 ஹெக்டரில் தர்பூசணி பயிரிடப்பட்டுள்ளது. வானுார் தாலுகா பகுதியில் 300 ஹெக்டரில் பயிரிட்டுள்ளனர். 2வது அறுவடை நடந்து வருகிறது. தர்பூசணி அதிக நீர்ச்சத்து நிறைந்த பழம்.
சூரிய வெப்பத்தினால் ஏற்படக்கூடிய நீர் சத்து குறைவை உடனடியாக திருப்பி தரக்கூடிய பழம். தர்பூசணியில் குறைந்த அளவே சர்க்கரை உள்ளதால் சர்க்கரை நோயாளிகள் கூட சாப்பிடலாம்.
விவசாயிகள் நிறத்திற்காகவும், சுவைக்காகவும் சில ரசாயனங்களை ஊசியின் மூலம் தர்பூசணியில் செலுத்துவதாக தற்போது நிலவி வரும் தகவல் முற்றிலும் வதந்தி. இதனை யாரும் நம்ப வேண்டாம்' என்றார்.
ஆய்வின் போது, வேளாண் வணிக துணை இயக்குனர் சுமதி, தோட்டக்கலை உதவி இயக்குனர் கீதா, உதவி தோட்டக்கலை அலுவலர் கிருஷ்ணராஜ், கிராம நிர்வாக அலுவலர் குணசேகரன் உடனிருந்தனர்.