/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
தென்பெண்ணையாற்றில் கழிவு நீர் கலப்பதால் குடிநீர் பாதிப்பு! அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்ள கோரிக்கை
/
தென்பெண்ணையாற்றில் கழிவு நீர் கலப்பதால் குடிநீர் பாதிப்பு! அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்ள கோரிக்கை
தென்பெண்ணையாற்றில் கழிவு நீர் கலப்பதால் குடிநீர் பாதிப்பு! அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்ள கோரிக்கை
தென்பெண்ணையாற்றில் கழிவு நீர் கலப்பதால் குடிநீர் பாதிப்பு! அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்ள கோரிக்கை
ADDED : ஏப் 07, 2025 06:30 AM

தென்பெண்ணையாற்றில் கழிவுநீர் கலந்து, மாசடைந்து வருவதால் கள்ளக்குறிச்சி மற்றும் விழுப்புரம் மாவட்ட மக்களுக்கு விநியோகிக்கப்படும் குடிநீரின் துாய்மை கேள்விக்குறியாகியுள்ளது.
தென்னிந்தியாவின் முக்கிய ஆறான தென்பெண்ணை, கர்நாடக மாநிலம் நந்தி துர்கா மலையில் உருவெடுத்து, 112 கி.மீ., பயணித்து தமிழக எல்லையான கெலவரபள்ளி அணையை வந்தடைகிறது.
அங்கிருந்து கிருஷ்ணகிரி, சாத்தனுார் அணையை கடந்து திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலுார் மாவட்டங்கள் வழியாக தமிழகத்தில், 320 கி.மீ., பாய்ந்தோடி வங்கக்கடலில் கலக்கிறது.
குறிப்பாக தென்மேற்கு பருவ மழைக்காலங்களில் தென்பெண்ணையில் நீர் வரத்து அதிகரிக்கும். தொடர்ந்து வடகிழக்கு பருவமழை காலத்தில் வெள்ளப் பெருக்கு ஏற்படும். மலை, குன்று என கடந்து வரும் ஆறு கள்ளக்குறிச்சி மாவட்டம், மூங்கில்துறைபட்டியிலிருந்து மணல் நிரம்பிய ஆற்றில் பயணிக்கிறது.
இதன் காரணமாக இப்பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து ஆற்றின் இரு பகுதிகளிலும் நெல், கரும்பு, வேர்க்கடலை என முப்போக சாகுபடி மேற்கொள்ள வழி ஏற்படுகிறது.
திருக்கோவிலுார் அணைக்கட்டில் இருந்து திருப்பி விடப்படும் தண்ணீரால், 10 ஆயிரம் ஹெக்டருக்கும் அதிகமான பரப்பளவில் விழுப்புரம், கடலுார் மாவட்டங்களில் விவசாயம் மேற்கொள்ளப்படுகிறது.
கழிவு நீர் கலப்பு
மேலும், குடிநீருக்கும் முக்கிய நீர் ஆதாரமாக விளங்குகிறது. குறிப்பாக கள்ளக்குறிச்சி, விழுப்புரம் மாவட்ட மக்களின், 75 சதவீத குடிநீர் தேவையை தென்பெண்ணையாறு பூர்த்தி செய்கிறது. இந்நிலையில், குடிநீரின் துாய்மை என்பது தற்போது கேள்விக்குறியாகி உள்ளது.
இதற்கு காரணம் கர்நாடக மாநிலத்தில் உள்ள தொழிற்சாலைகளில் இருந்து சுத்திகரிக்கப்படாமல் வெளியேற்றப்படும் கழிவு நீர் நேரடியாக, ஆற்றில் கலக்கிறது. அதேபோல பெங்களூரு உள்ளிட்ட நகரங்களில் இருந்து வெளியேறும் கழிவுநீரும் தென்பெண்ணையில் கலக்கிறது.
இதனால் கெலவரப்பள்ளிக்கு வரும் நீர் மாசடைந்து நுரை பொங்கி அணையை வந்தடைகிறது. அங்கிருந்து படிப்படியாக அணையைக் கடந்து கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு வரும் தண்ணீர் பல மீட்டர் ஆழத்தில் இருக்கும் மணலில் புகுந்து நிலத்தடி நீரும் பாதிக்கப்படுகிறது.
பரிசோதனை அவசியம்
இது ஒரு புறம் இருக்க தென்பெண்ணையை ஒட்டி இருக்கும் நகரம் மற்றும் கிராமப் பகுதிகளிலிருந்து வெளியேற்றப்படும் கழிவு நீரும் ஆற்றில் கலக்கிறது.
இது குறித்து சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கூறுகையில், 'விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் கூட்டுக் குடிநீர் திட்டங்கள் மூலம் வினியோகிக்கப்படும் நீரின் தரத்தை ஆய்வாளர்கள் பரிசோதிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.
தென்பெண்ணை விவசாயத்துக்கு மட்டுமே என்ற நிலை மாறி குடிநீருக்குமான வாழ்வாதாரமாக இருப்பதால் குறிப்பாக தமிழக எல்லையில் ஆற்றில் கழிவு நீர் கலப்பதை தடுப்பதுடன் அதை பாதுகாக்கும் வகையில் அரசு விரிவான பாதுகாப்பு செயல்திட்டத்தை உருவாக்கி நடைமுறைப்படுத்த வேண்டியது அவசியமாகி உள்ளது' என்றனர்.
-நமது நிருபர்-