ADDED : செப் 08, 2026 07:22 PM

விழுப்புரம்: விழுப்புரம் நான்குமுனை சந்திப்பு சிக்னலில் நிற்கும் வாகன ஓட்டிகள் சுட்டெரிக்கும் வெயிலால் அவதியடைந்து வருகின்றனர்.
விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. 100 டிகிரி அளவிற்கு வெயில் சுட்டெரிப்பதால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.
முக்கிய சாலைகளில் உள்ள சிக்னல்களில் வாகன ஓட்டிகள் காத்திருக்கும்போது சுட்டெரிக்கும் வெயிலின் அனலில் சிக்கி தவித்து வருகின்றனர்.
இதற்கு தீர்வு காணும் வகையில், விழுப்புரம் நான்குமுனை சிக்னல் சந்திப்பில் வாகனங்கள் காத்திருக்கும் பகுதிகளில் கடந்த ஏப்., மாதம் நிழல் பந்தல் அமைக்கப்பட்டது.
இந்த நிழல் பந்தல் ஓரிரு மாதங்களில் அகற்றப்பட்டது. இந்நிலையில், தற்போதும் வெயிலின் தாக்கம் அதிகரித்து, அனல் காற்று வீசுகிறது. இதனால், சிக்னல்களில் காத்திருக்க வாகன ஓட்டிகள், நிற்க முடியாமல் அவதியடைந்து வருகின்றனர்.
எனவே, எல்நினோ தாக்கத்தால் வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், வாகன ஓட்டிகளின் நலனை கருத்தில் கொண்டு மீண்டும் நான்குமுனை சிக்னலில் நிழல் பந்தல் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
