/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
மேம்பால சீரமைப்பு பணிகள் முடியாமல் உள்ளதால் பொது மக்கள் பாதிப்பு: திண்டிவனத்தில் தினந்தோறும் தொடரும் போக்குவரத்து நெரிசல்
/
மேம்பால சீரமைப்பு பணிகள் முடியாமல் உள்ளதால் பொது மக்கள் பாதிப்பு: திண்டிவனத்தில் தினந்தோறும் தொடரும் போக்குவரத்து நெரிசல்
மேம்பால சீரமைப்பு பணிகள் முடியாமல் உள்ளதால் பொது மக்கள் பாதிப்பு: திண்டிவனத்தில் தினந்தோறும் தொடரும் போக்குவரத்து நெரிசல்
மேம்பால சீரமைப்பு பணிகள் முடியாமல் உள்ளதால் பொது மக்கள் பாதிப்பு: திண்டிவனத்தில் தினந்தோறும் தொடரும் போக்குவரத்து நெரிசல்
ADDED : ஏப் 04, 2024 11:12 PM

திண்டிவனம்:திண்டிவனம் மேம்பாலத்தின் மேல்பகுதியில் நடைபெற்று வரும் சீரமைப்பு பணிகள் ஆமை வேகத்தில் நடைபெறுவதால், பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.
திண்டிவனம் மேம்பாலம் கடந்த 2000 ம் ஆண்டு கட்டப்பட்டது. பாலம் கட்டி 20 ஆண்டுகளுக்கு மேலாவதால், பாலத்தின் பல பகுதிகளில் விரிசல் விட்டு இருந்தது. இதை தொடர்ந்து மேம்பாலத்தை சீரமைப்பதற்காக ரூ.8.13 கோடி நிதி, நெடுஞ்சாலைத்துறை சார்பில் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதை தொடர்ந்து கடந்த 2022ம் ஆண்டு மார்ச் மாதம் பாலம் சீரமைப்பதற்கான பூமி பூஜை நடந்து, பணிகள் துவங்கியது.
பாலத்தின் மேல்பகுதியில் நான்கு மார்க்கமாக செல்லும் சாலைகள் உள்ளது. இதில் சென்னை, புதுச்சேரி, விழுப்புரம் மார்க்கமாக செல்லும் சாலைகள் ஒவ்வொன்றாக சீரமைக்கப்பட்டது . இந்த மூன்று சாலைகள் வழியாக அனைத்து வாகனங்களும் செல்கின்றது.
கடைசி கட்டமாக செஞ்சி செல்லும் சாலை ஒரு மாதத்திற்கு முன் சீரமைக்கும் பணி துவங்கியது. இதனால் மேம்பாலத்திலிருந்து செஞ்சி மார்க்கமாக செல்லும் சாலை அடைக்கப்பட்டது.
சீரமைப்பு பணிகள் ஒரு மாதத்திற்குள் முடிவடைந்துவிடும் என்று நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டும், தற்போது வரை பாதியளவிற்குதான் பணிகள் நடந்துள்ளது.
திண்டிவனம் நகரத்தில் குறிப்பாக செஞ்சி செல்லும் சாலையிலுள்ள நேரு வீதி, காமாட்சியம்மன் கோவில் வீதி, ராஜாஜி வீதி ஆகிய இடங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகள் நடைபெற்று வருகின்றது. இதனால் நகரப்பகுதியில் அனைத்து வாகனங்களும் செல்வதால், தினந்தோறும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகின்றது.
இது இல்லாமல் கடந்த ஒரு மாத்திற்கு மேல் மேம்பால சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருவதால், நகராட்சி பஸ் நிலையத்திற்கு வாகனங்கள் வருவதில் சிரமம் உள்ளது. தினந்தோறும் பஸ் நிலைய பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகின்றது. அவசரத்திற்கு ஆம்புலன்ஸ் வாகனங்கள் கூட செல்ல முடியாத நிலை உள்ளது.
மேம்பால சீரமைப்பு பணிகள் ஆமை வேகத்திலும், குறைவான தொழிலாளர்களை கொண்டு நடப்பதால், பணிகள் முடிவடையாமல் குறித்த காலத்திற்குள் முடிக்க முடியாமல் நீண்டு கொண்டே போகின்றது. இதனால் பொது மக்கள், வாகன ஓட்டிகள் தினந்தோறும் அவதியடைகின்றனர்.
நகர மக்கள் மற்றும் வாகன ஓட்டிகளின் நலனை கருத்தில் கொண்டு, மேம்பால சீரமைப்பு பணிகளை கூடுதல் பணியாளர்களை கொண்டு விரைந்து முடிக்க நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.

