ADDED : செப் 23, 2026 09:03 PM
ஆரோவில்: ஆரோவில் அருகே சவுக்கு தோப்பில் தீயில் சிக்கி முதியவர் உயிரிழந்தார்.
புதுச்சேரி மாநிலம் சஞ்சீவி நகரைச் சேர்ந்த ஏழுமலை, 65; இவருக்கு வானுார் அடுத்த துருவை கிராமத்தில் ஒரு ஏக்கர் விவசாய நிலம் உள்ளது.
அதில் சவுக்கு பயிரிட்டு வந்த அவர், கடந்த இரு தினங்களுக்கு முன்பு சவுக்கு மரங்களை வெட்டி லோடு மூலம் அனுப்பினார். இந்நிலையில், நேற்று காலை 11:00 மணிக்கு, நிலத்தில் கிடந்த சவுக்கு கழிவுகளை தீ வைத்து கொளுத்தினார்.
அப்போது ஏற்பட்ட அதிகப்படியான புகையில் சிக்கி மூச்சு திணறிய ஏழுமலை, எதிர்பாராதவிதமாக நெருப்பில் விழுந்தார். அதில் தீக்காயத்துன் வலி தாங்க முடியாமல் அங்கும் இங்குமாக ஓடி விழுந்தார். நீண்ட நேரமாகியும் ஏழுமலை வெளியே வராததால் சந்தேகமடைந்த அருகிலுள்ள நிலத்தின் உரிமையாளர்கள், சம்பவ இடத்துக்கு சென்று பார்த்தபோது அவர் தீயில் சிக்கி உயிரிழந்தது தெரிய வந்தது.
இது குறித்து தகவலறிந்த ஆரோவில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, இறந்தவரின் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக புதுச்சேரி கதிர்காமம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து ஆரோவில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
