மின் விபத்திலிருந்து பாதுகாப்பு:மின்துறை எச்சரிக்கை
மின் விபத்திலிருந்து பாதுகாப்பு:மின்துறை எச்சரிக்கை
UPDATED : ஆக 30, 2026 07:21 PM
ADDED : ஆக 30, 2026 07:12 PM
விழுப்புரம்: வடகிழக்கு பருவமழையையொட்டி, பொதுமக்கள் மின் விபத்துகள் ஏற்படாமல் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என விழுப்புரம் மின் மேற்பார்வை பொறியாளர் பாரதி தெரிவித்துள்ளார்.
அவரது செய்திக்குறிப்பு :
விழுப்புரம் மின் பகிர்மான வட்டத்தில் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள மின்கம்பங்கள், மின் கம்பிகள், தளவாட பொருட்கள், வாகனங்கள் தயார் நிலையில் உள்ளன.
களப்பணியாளர்கள் இயற்கை இடர்பாடுகளின் போது துரிதமாகவும், உடனடியாகவும் நிவர்த்தி செய்யும் வகையில் அலுவலர்களின் தலைமையில் குழு அமைத்து முழுவீச்சில் எந்த நேரமும் செயல்படும் வகையில் உள்ளனர்.
வடகிழக்கு பருவமழையில் ஏற்படும் மின்தடை, மின்சார பொருட்கள் சேதாரம், மின்விபத்து ஆகியவை பற்றி மொபைல் 9498390744 எண்ணில் தெரிவிக்க வேண்டும்.
மக்கள் தங்கள் பகுதிகளில் ஏற்படும் மின்தடை, மின்சார பழுதுபோன்ற புகார்களை 24 மணி நேரமும் சென்னை தலைமையகத்தில் இயங்கும் மின்னகம் எண் 9498794987 தொடர்பு கொண்டு தெரிவிக்க வேண்டும்.
மேலும், வாட்ஸ் அப் எண் 9445855768 ல் தெரிவிக்கலாம். அறுந்து தரையில் விழுந்து கிடக்கும் மேல்நிலை மின்கம்பிகள், தாழ்வு, தொய்வான மின் கம்பிகளை மக்கள் தொட வேண்டாம்.
மின்சாரம் சார்ந்த பொருட்களில் தன்னிச்சையாக செயல்படாமல் சம்மந்தப்பட்ட மின்வாரிய பிரிவு அலுவலருக்கு தெரியப்படுத்த வேண்டும்.
இடி அல்லது மின்னலின் போது டி.வி., மிக்சி, கிரைண்டர், கணினி மற்றும் தொலைபேசி பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.
ஈரமான கைகளோடு சுவிட்ச்கள், விளக்குகளை இயக்க கூடாது. மழை காலங்களில் மின்மாற்றிகள், மின்கம்பங்கள், மின்பகிர்வு பெட்டிகள் ஸ்டே ஒயர்களுக்கு அருகே செல்ல வேண்டாம்.
மின் கம்பத்திற்காக போடப்பட்டுள்ள ஸ்டே ஒயர்கள் மீது அல்லது மின்கம்பம் மீது கொடிகயிறு கட்டி துணி காயவைக்கும் செயலை தவிர்க்க வேண்டும்.
இங்கு கால்நடைகளை கட்ட வேண்டாம். இடி, மின்னலின் போது தஞ்சம் அடைய மின்கம்பிகள், மின் கம்பங்கள், மரங்கள், ஊலோக கம்பிவேலி இல்லாத பகுதிகளை தேர்வு செய்ய வேண்டும். அவசர நேரங்களில் மின் இணைப்பை விரைந்து துண்டிக்கும் வகையில் மின் கருவிகளின் சுவிட்ச்கள் இருப்பிடம் அமைய வேண்டும்.
மக்கள் தங்களின் வீடு, கடை, ஓட்டலில் ஓயரிங் செய்யும் போது தரமான ஐ.எஸ்.ஐ., முத்திரையிட்ட ஒயரிங் சாமான்களை உபயோகித்தம் முறையான நில இணைப்பு கொடுத்தும் ஒயரிங் செய்ய வேண்டும்.
பழுதான மின் உபகரணங்களை உடனே மாற்றி அமைக்க வேண்டும். மழை காலங்களில் துப்பரவு பணி செய்யும் சாலைகளிலும், மக்கள் நடமாடும் பகுதிகளிலும் மழைநீர் தேக்கம் மற்றும் பாதாள சாக்கடை கழிவுநீர் தேங்கும் பகுதிகளில் மின்கம்பிகள் தாழ்வாகவே அறுந்து விழுந்த நிலையிலோ, மின்கம்பங்கள் பழுதாகியிருப்பதை கண்டறிந்தால் அப்பகுதி மக்கள், துாய்மை பணியாளர்கள் எச்சரிக்கையாக இருந்து சம்பந்தபட்ட பிரிவு அலுவலகத்திற்கு தெரிவிக்க வேண்டும்.
மின்சாரம் சார்ந்த புகார்களை மக்கள், இந்த எண்களிலும் தெரிவிக்கலாம். செயற்பொறியாளர்கள் விழுப்புரம் - 9445855738, கண்டமங்கலம் - 9445855769, திண்டிவனம் - 9445855835, செஞ்சி - 9445855784, திருவெண்ணெய்நல்லுார் - 9445855722 ஆகியவற்றில் தெரிவிக்கலாம் என தெரிவித்துள்ளார்.
