/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
ஏரியில் ஆகாய தாமரைச் செடிகள் ஆக்கிரமிப்பு: அதிகாரிகள் அலட்சியத்தால் விவசாயிகள் கவலை
/
ஏரியில் ஆகாய தாமரைச் செடிகள் ஆக்கிரமிப்பு: அதிகாரிகள் அலட்சியத்தால் விவசாயிகள் கவலை
ஏரியில் ஆகாய தாமரைச் செடிகள் ஆக்கிரமிப்பு: அதிகாரிகள் அலட்சியத்தால் விவசாயிகள் கவலை
ஏரியில் ஆகாய தாமரைச் செடிகள் ஆக்கிரமிப்பு: அதிகாரிகள் அலட்சியத்தால் விவசாயிகள் கவலை
ADDED : அக் 28, 2025 06:07 AM

விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி ஏரியை ஆக்கிரமித்துள்ள ஆகாய தாமரை செடிகளை அகற்ற பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்தும் சீரமைக்காததால் மழைநீர் தேக்கி வைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
விக்கிரவாண்டி பேரூராட்சி தேசிய நெடுஞ்சாலையில் 300 ஏக்கர் பரப்பளவில் 2 கலிங்கல் மற்றும் 5 மதகுகளை உடைய ஏரி உள்ளது. விக்கிரவாண்டி கிழக்கு, மேற்கு பகுதிகளில் உள்ள இந்த ஏரி பெரிய ஏரி, சிறிய ஏரி, அரண்டேரி என அழைக்கப்படுகிறது.
பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த ஏரி மூலம் 800 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. பாசன வசதி அளவு அதிகமாக இருந்தாலும் தற்போதுள்ள சூழ்நிலையில் ஏரியில் அடர்ந்துள்ள ஆகாய தாமரை செடிகளாலும், கருவேல மரங்களாலும் சூழ்ந்துள்ளதால் தற்போது பெய்து வரும் மழை, சாகுபடிக்கு தேவையான அளவில் தேக்கி வைக்க முடியாத நிலை உள்ளது.
கடந்த காலங்களில், இந்த ஏரியின் மூலம் முப்போகம் விளைந்த நிலை மாறி தற்போது ஒரு போகம் மட்டுமே இந்த ஏரி மூலம் பாசன வசதி பெற முடிகிறது. இதனால் விவசாயிகள் 400 ஏக்கர் அளவிற்குதான் ஏரி பாசனத்தை நம்பி நெற்பயிர் சாகுபடி செய்ய முடிகிறது.
அதுவும் கடந்த 2007ம் ஆண்டு பராமரிப்பு திட்டத்தின் கீழ் ஏரியை சீரமைத்தனர், அதன் பிறகு 2008 முதல் 2010ம் ஆண்டு வரை விக்கிரவாண்டி ஏரியில் நான்கு வழிச்சாலை அமைக்க ஏரியில் மண் எடுத்த போது பல இடங்களில் பள்ளம் உருவானது. ஏரியின் பள்ளத்தில் தண்ணீர் தேங்கியதால் பாசனத்திற்கு பயனற்று போனது.
கடந்த 2012ம் ஆண்டு ஏரி பாசன வாய்க்கால்களை பொதுப்பணித் துறையினர் ஆழப்படுத்தி 30 மீட்டர் நீளத்திற்கு கான்கிரீட் வாய்க்கால் அமைத்தனர். அதன் பிறகு கடந்த 13 ஆண்டுகளாக ஏரியைப் பற்றி யாரும் கவலைப்படவில்லை.
அரசு அதிகாரிகளின் முறையான கண்காணிப்பு இல்லாததால் ஏரியின் சுற்றுப்புறங்களில் குடியிருப்போர் தங்கள் வசதிக்காக கரையோரங்களை முழுமையாக ஆக்கிரமித்து வருகின்றனர்.
தமிழக அரசு, விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொண்டு தற்போதுள்ள நவீன யுக்திகளை கடைபிடித்து விக்கிரவாண்டி ஏரியில் ஆக்கிரமித்துள்ள ஆகாய தாமரைச் செடிகள் மற்றும் கருவேல மரங்களை அகற்றி, கரையை பலப்படுத்த தேவைப்படும் மண்களை ஏரி மதகு பகுதியில் அள்ளி சீரமைத்தால் அப்பகுதியில் ஆழம் ஏற்பட்டு பாசனத்திற்கு தேவையான தண்ணீர் தேங்கி நிற்க வசதியாக இருக்கும்,.
இதனால் நிலத்தடி நீர் அதிகரித்து விக்கிரவாண்டி பகுதி மக்களின் குடிநீர் பற்றாக்குறையும் நீங்கும். அதே போன்று ஏரிக்கு தண்ணீர் வரத்து வரக்கூடிய முகப்பு பகுதி யான மேலக்கொந்தையில் வாய்க்காலில் அடர்ந்துள்ள செடிகளை அகற்றி சீரமைக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

