ADDED : ஜன 01, 2024 12:19 AM

விழுப்புரம்: வானுார் அரசு விதைப் பண்ணையில், பண்ணை மேம்பாட்டுக் குழு கூட்டம் நடந்தது.
மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் கணேசன், துணை இயக்குனர் (திட்டங்கள்) பெரியசாமி ஆகியோர் தலைமை தாங்கினர்.
காகுப்பம், இருவேல்பட்டு, வானுார் அரசு விதைப்பண்ணை வேளாண்மை அலுவலர்கள் பங்கேற்றனர்.
கூட்டத்தில் வருடாந்திர பண்ணை பயிர் சாகுபடி, செலவின விபரங்கள் குறித்து ஒவ்வொரு பண்ணை வாரியாக ஆய்வு செய்யப்பட்டது.
மேலும், அனைத்து வேளாண்மை அலுவலர்களுக்கும், பண்ணை செலவினத்தைக் குறைத்து, அதிக மகசூல் பெற அறிவுரை வழங்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து பண்ணையில் இயற்கை முறையில் சாகுபடி செய்துள்ள பாரம்பரிய ரகமான ஆத்துார் கிச்சலி சம்பா நெற்கதிர் வெளிவரும் தருவாயில் உள்ள வயலை ஆய்வு செய்தனர்.
மேலும், பண்ணையில் தென்னை நெட்டை எக்ஸ் குட்டை ரக நாற்றங்காலை பார்வையிட்டு, 6,000 தென்னங்கன்றுகள் தயார் நிலையில் உள்ளதை, பிற மாவட்டங்களுக்கு மாறுதல் செய்ய அறிவுரை வழங்கினர்.
கூட்டத்தில் திண்டிவனம் வேளாண் அறிவியல் நிலைய விஞ்ஞானி கணபதி, வானுார் வேளாண்மை உதவி இயக்குனர் எத்திராஜ், வேளாண்மை அலுவலர் (மாநிலத் திட்டம்) ஆரோக்கியராஜ், திண்டிவனம் விதைச்சான்று அலுவலர் மணிகண்டன், இருவேல்பட்டு விதைப்பண்ணை வேளாண்மை அலுவலர் கவிப்பிரியன், காகுப்பம் அரசு விதைப் பண்ணை வேளாண்மை அலுவலர் அருண்குமார், வானுார் விதைப் பண்ணை வேளாண்மை அலுவலர் சவுந்தர்ராஜன், உதவி வேளாண்மை அலுவலர் யமுனா பங்கேற்றனர்.