/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
கும்பலாக சேர்ந்து தாக்கியதில் விவசாயி பரிதாப பலி
/
கும்பலாக சேர்ந்து தாக்கியதில் விவசாயி பரிதாப பலி
ADDED : ஜன 01, 2025 01:07 AM

திருக்கோவிலுார்; விழுப்புரம் மாவட்டம், நாயனுார் கிராமத்தைச் சேர்ந்தவர் அய்யனார் மகன் மணிகண்டன், 28, விவசாயி. நேற்று முன்தினம் இரவு, மெயின் ரோடு பகுதியில் உள்ள கரும்புத் தோட்டத்தில் தண்ணீர் பாய்ச்சிக் கொண்டிருந்தார்.
இரவு 8:30 மணிக்கு, கரும்புத் தோட்டம் அருகே வீரபாண்டி கிராமத்தைச் சேர்ந்த ஏழுமலை மகன் வினோத், 19, என்பவருக்கும் இவருக்கும் தகராறு ஏற்பட்டது.
ஆத்திரமடைந்த வினோத், தன் அண்ணன் பழனிவேல், 27, என்பவருக்கு போனில் தகவல் தெரிவித்தார். பழனிவேல் மற்றும் பார்த்திபன், 26, கோபி, 20, பாக்கியராஜ், 36, ஆகியோருடன் நாயனுார் கிராமத்திற்குச் சென்று மணிகண்டனை சரமாரியாக தாக்கினர். இதில் மணிகண்டன் மயங்கி விழுந்தார்.
இதையறிந்த கிராம மக்கள், தாக்கிய கும்பலை பிடித்து வைத்து, அரகண்டநல்லுார் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தாக்கிய கும்பல் மீது போலீசார் வழக்கு பதிந்து கைது செய்தனர்.
இந்நிலையில், சம்பவத்துக்குக் காரணமான வீரபாண்டியைச் சேர்ந்த மேலும் சிலரை கைது செய்ய வலியுறுத்தி, நாயனுார் பொதுமக்கள் திருக்கோவிலுார் - விழுப்புரம் சாலை, தேவனுார் கூட்ரோட்டில், நேற்று அதிகாலை 1.00 மணிக்கு மறியலில் ஈடுபட்டனர். போலீசார் பேச்சு நடத்தியதை அடுத்து மறியல் கைவிடப்பட்டது.

