/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
விழுப்புரம் மாவட்டத்தில் தர்பூசணி விளைச்சல் அமோகம் விற்பனையும் அதிகரித்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி
/
விழுப்புரம் மாவட்டத்தில் தர்பூசணி விளைச்சல் அமோகம் விற்பனையும் அதிகரித்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி
விழுப்புரம் மாவட்டத்தில் தர்பூசணி விளைச்சல் அமோகம் விற்பனையும் அதிகரித்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி
விழுப்புரம் மாவட்டத்தில் தர்பூசணி விளைச்சல் அமோகம் விற்பனையும் அதிகரித்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி
ADDED : மார் 05, 2026 03:26 AM

விழுப்புரம்:விழுப்புரம் மாவட்டத்தில், தர்பூசணி அதிக விளைச்சல் மற்றும் விற்பனை அதிகரித்துள்ளதால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கோடை வெயில் தாக்கத்திற்கு அதிக நீர்ச்சத்துள்ள தர்பூசணி போன்ற இயற்கை பழங்களை வாங்கி பயன்படுத்துகின்றனர். மலிவாக கிடைக்கும் தர்பூசணியின் சுவையும், விட்டமின் ஏ, சி, போன்ற சத்துக்களும் இருப்பதால், கோடையில் அதிக அளவில் விற்பனையாகிறது.
விழுப்புரம் மாவட்டத்தில், மரக்காணம், ஒலக்கூர், வானுார், மேல்மலையனுார், மயிலம், முகையூர், விக்கிரவாண்டி, காணை ஆகிய வட்டாரங்களில் அதிகளவில் தர்பூசணி பயிரிடப்படுகிறது. 9,500 ஏக்கர் பரப்பளவில் இந்தாண்டு தர்பூசணி பயிரிட்டுள்ளனர்.
மாவட்டத்தில் கடந்த நவம்பரில் விதைப்பு செய்யப்பட்ட தர்பூசணி், முதற்கட்டமாக ஜனவரி மாதத்தில் அறுவடை செய்யப்பட்டது. டன் ஒன்றுக்கு ரூ. 20 ஆயிரம் முதல் ரூ. 25 ஆயிரம் வரை விலை கிடைத்தது.
பருவமழை முடிந்து டிசம்பரில் சாகுபடி செய்யப்பட்ட தர்பூசணி தற்போது அறுவடை துவங்கியுள்ளது. டன் ஒன்றுக்கு ரூ.20 ஆயிரம் முதல் ரூ.25 ஆயிரம் வரை விற்கப்படுகிறது. ஒரு ஏக்கருக்கு 15 டன் அளவில் விளைச்சல் கிடைக்கிறது. பழங்களில் தரம், எடையை பொருத்து வியாபாரிகள் விலை வைத்து எடுக்கின்றனர்.
விழுப்புரம் மாவட்டத்தில் கொள்முதல் செய்யப்படும் தர்பூசணி, சென்னை கோயம்பேடு மார்க்கெட் மற்றும் தமிழகத்தின் பல மாவட்டங்களுக்கும், கேரளா, கர்நாடகா போன்ற பல்வேறு வெளி மாநிலங்களுக்கும் விற்பனைக்கு அனுப்பி வைக்கின்றனர்.
கடந்த ஆண்டு ஊசி போட்டு தர்பூசணி பழுக்க வைப்பதாக எழுந்த புகாரால், விற்பனை பாதிக்கப்பட்டு, விவசாயிகள் கடும் நஷ்டத்திற்கு ஆளாகினர். ஆனால், இந்த ஆண்டு, விற்பனை சூடு பிடித்துள்ளதுடன், விலையும் கிடைப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
வேளாண்துறை மானியம் தர்பூசணி சாகுபடி குறித்து, தோட்டக்கலை துறை துணை இயக்குநர் அன்பழகன் கூறுகையில், தர்பூசணி பயிர் 65 முதல் 70 நாட்களில் குறுகிய காலத்தில் லாபம் தரும் சாகுபடி என்பதால், விழுப்புரம் மாவட்டத்தில் தர்பூசணி பயிரிடுவதில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
ஆண்டு தோறும் பயிரிடும் பரப்பும் உயர்ந்து வருகிறது. ஏக்கருக்கு ரூ.2.50 லட்சம் வரை லாபம் கிடைக்கிறது. சாகுபடியை ஊக்குவிப்பதற்கு, தேசிய தோட்டக்கலை இயக்கத் திட்டம் மூலம் ஏக்கருக்கு ரூ.8 ஆயிரம் தர்பூசணி விதை மற்றும் இடுபொருள்கள், சாகுபடி மானியம் வழங்கப்படுகிறது. வேளாண் துறை சார்பில் ஆலோசனை வழங்கி நேரடி கண்காணிப்பிலும் ஈடுபட்டுள்ளோம் என்றார்.

