/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
ஏரிகள் வறண்டு பயிர்கள் கருகுவதால் விவசாயிகள் வேதனை! விழுப்புரத்தை வறட்சி மாவட்டமாக அறிவிக்க கோரிக்கை
/
ஏரிகள் வறண்டு பயிர்கள் கருகுவதால் விவசாயிகள் வேதனை! விழுப்புரத்தை வறட்சி மாவட்டமாக அறிவிக்க கோரிக்கை
ஏரிகள் வறண்டு பயிர்கள் கருகுவதால் விவசாயிகள் வேதனை! விழுப்புரத்தை வறட்சி மாவட்டமாக அறிவிக்க கோரிக்கை
ஏரிகள் வறண்டு பயிர்கள் கருகுவதால் விவசாயிகள் வேதனை! விழுப்புரத்தை வறட்சி மாவட்டமாக அறிவிக்க கோரிக்கை
ADDED : மே 04, 2024 07:05 AM

செஞ்சி : விழுப்புரம் மாவட்டத்தில் ஏரி குளங்கள் வேகமாக வறண்டு, நிலத்தடி நீர் மட்டம் குறைந்து விட்டதால் நடவு செய்த பயிர்களைக் காப்பாற்ற முடியாமல் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். இதனால், மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழகத்தில் விவசாயம் சார்ந்த மாவட்டங்களில் விழுப்புரம் மாவட்டமும் ஒன்று. டெல்டா மாவட்டங்களுக்கு அடுத்த நிலையில் விழுப்புரம் மாவட்டத்தில் நெல் விளைச்சல் இருக்கும். நெல் விளைச்சல் அதிகம் இருந்தாலும் இங்கு ஆற்று பாசனமும், அணைகளில் இருந்து நேரடி வாய்க்கால் பாசனமும் இல்லை. ஏரி மற்றும் கிணற்று பாசனத்தை மட்டுமே நம்பி விவசாயம் நடந்து வருகிறது.
திருவண்ணாமலை மாவட்டம், துரிஞ்சல் ஆற்றில் இருந்து வரும் நந்தன் கால்வாயில் கடந்த இரண்டு ஆண்டாக மட்டுமே ஏரிகளுக்கு தண்ணீர் வந்தது. அதுவும் கடந்த ஆண்டு முழு அளவில் வந்து சேரவில்லை.
மாவட்டத்தில் பெரிய ஏரிகளான பனமலை, மேல்மலையனுார் ஏரிகள் கடந்த ஆண்டு நிரம்பவில்லை. மாவட்டம் முழுதும் 5 சதவீதம் ஏரிகள் மட்டுமே நிரம்பின. மீதம் உள்ள ஏரிகளில் சில 75 சதவீதம் நிரம்பியது. 50 சதவீதம் ஏரிகள் பாதியளவே நிரம்பி இருந்தன.
கடந்த டிசம்பர் மாதம் சென்னை சுற்று வட்டார மாவட்டங்களிலும், கன்னியாகுமரியைச் சுற்றி உள்ள மாவட்டங்களிலும் கனமழை பெய்த போதும் தமிழகத்தின் உள் மாவட்டங்களில் மழை இல்லை.
குறிப்பாக விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த ஆண்டு இயல்பை விட மிக குறைந்த அளவில் மழை பெய்தது. மாவட்டத்தில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் மத்தியில் மழை பெய்தது. அதன் பிறகு நான்கு மாதங்களாக மழை பெய்யவில்லை.இந்நிலையில், கடந்த 10 நாட்களுக்கும் மேலாக கடும் வெயில் சுட்டெரித்து வருகிறது. மதியத்திற்கு பிறகு அனல் காற்று வீசுகிறது.
ஏரி, குளங்கள் வேகமாக வறண்டு விட்டன. கால்நடைகள் குடிப்பதற்கும் ஏரிகளில் தண்ணீர் இல்லை. கால்நடைகளுக்கு தேவையான செடி, கொடி, புல்லும் காய்ந்து விட்டன. கால்நடை வளர்ப்பவர்கள் மரங்களில் இருந்து தழைகளை வெட்டி தீவனமாக கொடுத்து வருகின்றனர்.
கடந்த மாதம் கிணற்று பாசனத்தை நம்பி நடவு செய்த நெற்பயிர்களுக்கு தற்போது தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. பல இடங்களில் பாதியளவு பயிர்களை விவசாயிகள் கைவிட்டனர்.
மீதம் உள்ள பாதி பயிர்களை காப்பற்ற அடுத்து வரும் நாட்களில் தண்ணீர் கிடைக்குமா என்ற சந்தே கம் எழுந்துள்ளது. இதனால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
இது மட்டுமின்றி பல இடங்களில் குடிநீர் பிரச்னையும் துவங்கி விட்டது. கிராமங்களில் போர்களில் போதிய அளவு தண்ணீர் கிடைக்கவில்லை. இதனால் விரைவில் குடிநீர் பிரச்னையும் ஏற்படும் நிலை உள்ளது.
எனவே, அரசு விழுப்புரம் மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அறிவித்து விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கவும், மாவட்டத்தில் குடிநீர் பிரச்னை ஏற்படாமல் இருக்கவும் போதிய முன்னெச்சரிக்கையாக நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.