/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
தடுப்பணை சீரமைக்க விவசாயிகள் கோரிக்கை
/
தடுப்பணை சீரமைக்க விவசாயிகள் கோரிக்கை
ADDED : நவ 08, 2024 11:09 PM

அவலுார்பேட்டை: அவலுார்பேட்டையில் ஏரி நிரம்பி வெளியேறும் உபரி நீர் தேங்கும் தடுப்பணையை சீரமைத்திட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேல்மலையனுார் அடுத்த அவலுார்பேட்டையில் ஏரி நிரம்பி வெளியேறும் உபரி நீர் மேல்மலையனுார் ஏரிக்குச் செல்கிறது. அவலுார்பேட்டை ஏரியின் பெரிய மடுவிலிருந்து வெளியேறும் நீர், காளியம்மன் கோவில், சுடுகாடு அருகே உள்ள பகுதியில் தேங்குவதற்காக தடுப்பணை கட்டப்பட்டுள்ளது.
இங்கு தேங்கும் நீர், கோவில்புரையூர், நொச்சலுார், தோப்பு உள்ளிட்ட 6 கி.மீ., நீளமுள்ள வாய்க்கால் வழியாக செல்கிறது.
இதனால் 250 ஏக்கருக்கும் மேற்பட்ட விவசாய நிலங்கள் பயனடைகின்றன. கிணறுகளின் நிலத்தடி நீர்மட்டம் உயர்வுதற்கும் இந்த வாய்க்கால் பயன்படுகிறது.
பழைய தடுப்பணையான இதை 25 ஆண்டுகளுக்கு முன்னர் சீரமைத்துள்ளனர். தொடர்ந்து பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளாத நிலையில், ஆங்காங்கே தடுப்பணை பலவீனமடைந்து தண்ணீர் வீணாக வெளியேறுகிறது.
அணையில் மையப்பகுதியில் கற்கள் பெயர்ந்து பெரிய அளவில் சேதம் ஏற்பட்டுள்ளது.
இங்கிருந்து வெளியே தண்ணீர் செல்லும் வாய்க்கால்களில் முட்புதர்கள் மண்டி துார்ந்துள்ளது.
இதனால், விவசாய நிலங்களின் வழியாகச் செல்வதற்கு வசதியாக வாய்க்கால் அமைக்கப்பட்டும், பராமரிப்பு இல்லாத நிலையில் காட்சிபொருளாக உள்ளது.
பொதுப்பணி துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த தடுப்பணையை சீரமைத்து இரண்டு அடி உயர்த்தி கட்டவும், வாய்க்கால்களில் சூழ்ந்துள்ள புதர்களை அகற்றி, துார் வாரும் பணி மேற்கொள்ளவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.