/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
வாய்க்கால் துார்வாரும் பணியால் விவசாயிகள்... மகிழ்ச்சி ;ஏரி நீர் பாசனத்தால் முப்போகம் பயிரிட வாய்ப்பு
/
வாய்க்கால் துார்வாரும் பணியால் விவசாயிகள்... மகிழ்ச்சி ;ஏரி நீர் பாசனத்தால் முப்போகம் பயிரிட வாய்ப்பு
வாய்க்கால் துார்வாரும் பணியால் விவசாயிகள்... மகிழ்ச்சி ;ஏரி நீர் பாசனத்தால் முப்போகம் பயிரிட வாய்ப்பு
வாய்க்கால் துார்வாரும் பணியால் விவசாயிகள்... மகிழ்ச்சி ;ஏரி நீர் பாசனத்தால் முப்போகம் பயிரிட வாய்ப்பு
ADDED : பிப் 13, 2026 05:07 AM

திருவெண்ணெய்நல்லுார்: திருவெண்ணெய்நல்லுார் அருகே 50 ஆண்டுகளுக்குப்பின் ஆக்கிரமிப்பில் இருந்த வாய்க்காலை சீரமைத்து விவசாயிகளுக்கு நீர் பாசனம் ஏற்படுத்தி தந்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். திருவெண்ணெய்நல்லுார் அடுத்த ஆமூர் கிராமத்தில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் பெரிய ஏரி உள்ளது. இந்த ஏரியின் மூலம் அப்பகுதியில் உள்ள 500 ஏக்கருக்கும் மேற்பட்ட விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வந்தன.
இந்நிலையில் அப்பகுதியில் உள்ள பாசன வாய்க்கால்கள் துார்ந்தும், ஏரி முறையாக பராமரிப்பு இல்லாமலும் துார்ந்தது. இதனால், கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக ஏரிக்கு முறையாக நீர் வரத்து இல்லாமல் இருந்தது.
இதன்காரணமாக விவசாயிகள் தண்ணீர் பற்றாக்குறையால் பயிர் செய்வதை குறைத்துக் கொண்டு ஆண்டுக்கு ஒருமுறை மானாவாரி பயிர்களை மட்டுமே சாகுபடி செய்து வருகின்றனர்.
ஏரிக்கு தண்ணீர் வராததால் விவசாயிகள் அவர்களது நிலத்திற்கு அருகாமையில் இருந்த வாய்க்காலை ஆக்கிரமிப்பு செய்து விளை நிலங்களாக மாற்றிக் கொண்டனர்.
இந்நிலையில், அப்பகுதியைச் சேர்ந்த ஜெயபால் தலைமையிலான விவசாயிகள் சிலர் பல ஆண்டுகளாக ஏரியை சீரமைத்து ஆக்கிரமிப்பில் உள்ள கிளை வாய்க்காலை துார்வார வேண்டுமென கோரிக்கை வைத்து, பல்வேறு கட்ட போராட்டங்கள் நடத்தி வந்தனர்.
அதன் பலனாக சில ஆண்டுகளுக்கு முன்பு 5 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஏரி முழுமையாக துார்வாரப்பட்டது. தொடர்ந்து சில நாட்களாக ஏரியிலிருந்து நீர்பாசனத்திற்காக செல்லக்கூடிய கிளை வாய்க்காலை வேளாண் மை பொறியியல் துறை சார்பில் ஜே.சி.பி., இயந்திரம் மூலம் சீரமைக்கும் பணி தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது.
இது குறித்து ஜெயபால் கூறுகையில், 'ஆமூர் ஏரி கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக முறையாக பராமரிக்காமல் இருந்து வந்தது. இதன் காரணமாக விவசாயிகளுக்கு முறையாக தண்ணீர் கிடைக்காமல் ஆண்டுக்கு ஒரு முறை அதாவது சம்பா போகம் மட்டுமே உளுந்து, எள் போன்ற பயிர்களை பயிரிட்டு வந்தனர். தற்போது ஏரி முழுமையாக துார்வாரப்பட்டு 50 ஆண்டுகளுக்கும் மேலாக ஆக்கிரமிப்பில் இருந்த வாய்க்கால் தற்போது துார் வாரப்பட்டு வருகிறது.
வாய்க்கால் முழுமையாக சரி செய்யப்பட்டால் நீர் மேலாண்மை பெருகி இப்பகுதியில் உள்ள 500 ஏக்கர் நிலங்கள் முப்போகம் விளைய வாய்ப்புள்ளது. அனைத்து கிராமங்களிலும் இளைஞர்கள் ஒன்று சேர்ந்து ஆர்வத்துடன் இத்தகைய நீர் மேலாண்மையை பெருக்க வேண்டும், அழிவின் வளிம்பில் உள்ள விவசாயத்தையும், விவசாயிகளையும் பாதுகாக்க வேண்டும்' என்றார்.

