/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
பெஞ்சல் புயலில் சேதமான ஆற்றங்கரைகள் சீர்படுத்த விவசாயிகள் வலியுறுத்தல்
/
பெஞ்சல் புயலில் சேதமான ஆற்றங்கரைகள் சீர்படுத்த விவசாயிகள் வலியுறுத்தல்
பெஞ்சல் புயலில் சேதமான ஆற்றங்கரைகள் சீர்படுத்த விவசாயிகள் வலியுறுத்தல்
பெஞ்சல் புயலில் சேதமான ஆற்றங்கரைகள் சீர்படுத்த விவசாயிகள் வலியுறுத்தல்
ADDED : ஆக 12, 2025 11:12 PM

விழுப்புரம் : மாவட்டத்தில், கடந்த 'பெஞ்சல்' புயலில் உடைந்த ஆற்றங்கரை, ஏரிகள் இன்னமும் சீர்படுத்தாமல் உள்ளதால், இந்தாண்டு மழையில் பெரும் சேதம் ஏற்பட வாய்ப்புள்ளதாக, விவசாயிகள் குற்றம்சாட்டினர்.
விழுப்புரம் தாலுகா அலுவலகத்தில் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைகேட்பு கூட்டம் நடந்தது. ஆர்.டி.ஓ., முருகேசன் தலைமை வகித்தார். அனைத்து துறை முக்கிய அலுவலர்கள் முன்னிலை வகித்தனர்.
இதில், விவசாயிகள் பேசியதாவது:
சங்கராபரணி ஆற்றில் மணல் திருட்டுகள் தொடர்வதை தடுக்கவும், நிலத்தடி நீரை பாதுகாக்கவும் தடுப்பணைகள் அமைக்க வேண்டும்.
அனைத்து தாலுகா அளவிலும் விவசாயிகள் கொடுக்கும் மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் அலட்சியப்படுத்துகின்றனர். குறிப்பாக, நில அளவை, பட்டா மாற்ற பணிகள் முடிக்காமல் அலைகழிக்கின்றனர்.
மழைக்காலம் தொடங்கியும், வேளாண்துறை சார்பில், விதைநெல் வழங்கப்படவில்லை. ஆடிப்பட்டத்திற்கான அனைத்து விதைகளையும் இருப்பு வைத்து வழங்க வேண்டும்.
எல்.ஆர்.பாளையம் கிராமத்தில் குடிநீரில் சுண்ணாம்பு கலந்து வருகிறது. குறைகளை தெரிவிக்க சென்றால் கண்டமங்கலம் பி.டி.ஓ.,வை சந்திக்க முடியவில்லை.
பயிர்கள் பாதிப்பு விழுப்புரம்-நாகை நான்கு வழிச்சாலை திட்டத்தால், விழுப்புரம் மாவட்டத்தில், ஏராளமான வாய்க்கால், ஓடைகள் மூடப்பட்டுள்ளன. இருபுறமும் வாய்க்கால் போடாததால், மழைக்காலங்களில் பயிர்கள் நீரில் மூழ்கி பாதிக்கப்படுகின்றன.
கடந்த 'பெஞ்சல்' புயலின் போது தென்பெண்ணை ஆறு, பம்பை ஆறு, மலட்டாறு ஆகியவற்றின் கரைகள் உடைந்து பெரும் சேதம் ஏற்பட்டது.
அதையே இன்னும் சீர்செய்யாமல் உள்ளதால், இந்தாண்டு மழை வெள்ளநீர் வந்தால், மீண்டும் விவசாய நிலமும், வீடுகளும் மூழ்கி கடும் பாதிப்பை ஏற்படுத்தும்.
உடைந்த ஆற்றங்கரைகள் பொதுப்பணித்துறையினர், குறைந்த பட்சம் கடந்த வெள்ளத்தின் போது உடைந்த ஆற்றங்கரைகள், ஏரிகள், தளவனுார் அணை கட்டு, பம்பை ஆறு ஆகியவற்றை சீர்படுத்த வேண்டும்.
இந்தாண்டு மழை வெள்ளத்தால் பாதிப்பு ஏற்படாமல் தடுக்க வேண்டும். வளவனுார் வரை ஏரிகளுக்கு செல்லும் ஆழங்கால் வாய்க்காலை சீர்படுத்த வேண்டும்.
புதிய ரக நெல், பிற விதைகளை வழங்க வேண்டும். தோட்டக்கலை மானிய திட்டங்களை விளக்க வேண்டும். உரத்தட்டுப்பாட்டை போக்க வேண்டும்.
கூட்டுறவு வங்கியில் எந்த உரமும் இருப்பு இல்லை. கடைகளில் போலியான திரவ உரம், ஊக்கிகள், தடை செய்யப்பட்ட பூச்சி மருந்துகள் விற்பதை ஆய்வு செய்து தடுக்க வேண்டும். சர்க்கரை ஆலையில் விவசாயிகளுக்கு பயிற்சியளிக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
இதையடுத்து கோரிக்கைகள் தொடர்பாக, அரசுக்கு பரிந்துரைத்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என, அதிகாரிகள் உறுதி அளித்தனர்.