/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
பழைய கட்டடத்தில் இயங்கும் அரசு பள்ளியால்... அச்சம்; அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள கோரிக்கை
/
பழைய கட்டடத்தில் இயங்கும் அரசு பள்ளியால்... அச்சம்; அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள கோரிக்கை
பழைய கட்டடத்தில் இயங்கும் அரசு பள்ளியால்... அச்சம்; அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள கோரிக்கை
பழைய கட்டடத்தில் இயங்கும் அரசு பள்ளியால்... அச்சம்; அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள கோரிக்கை
ADDED : ஜூலை 17, 2025 12:31 AM

விழுப்புரம்: விழுப்புரம் அருகே அரசு பள்ளி நுாற்றாண்டு பழைய கட்டடத்தில் ஆபத்தான நிலையில் இயங்கி வருகிறது. இது குறித்து அரசு உடனடியாக உரிய நடவடிக்கை மேற்கொள்ள கோரிக்கை எழுந்துள்ளது.
விழுப்புரம் அருகே கண்டம்பாக்கத்தில் அரசு ஆதிதிராவிடர் நல ஆரம்ப பள்ளி உள்ளது. கடந்த 1926ம் ஆண்டு துவங்கிய இப்பள்ளி, இரு வகுப்பறையில், சிமெண்ட் ஓடுகள் போட்ட பழமை வாய்ந்த கட்டடத்தில் நீண்ட காலமாக இயங்கி வருகிறது.
நுாற்றாண்டு பயன்பாட்டில் பழுதடைந்துள்ள பழங்கால கட்டடத்தில் தற்போது ஆபத்தான நிலையில் பள்ளி செயல்பட்டு வருகிறது.
தொடக்கத்தில் 50 மாணவ, மாணவிகள் 1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை படித்து வந்தனர். ஆனால் தற்போது, 25 பேர் தான் படிக்கின்றனர். இதில், இரு ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர்.
காலை 9:00 மணிக்கு தொடங்கி மாலை 4:10 மணி வரை வகுப்புகள் நடக்கின்றன.
அரசு ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் இப்பள்ளி இயங்கி வந்த நிலையில், இரண்டு வகுப்பறை கட்டடங்களில் ஒன்று உடைந்து சேதமாகி மூடப்பட்டுள்ளது. பயன்பாட்டில் உள்ள மற்றொரு வகுப்பறையில் ஜன்னல், கதவுகள், தரைத்தளம் சேதமடைந்து கிடக்கிறது.
இது குறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது:
பழமையான இந்த பள்ளிக்கூடத்தில் ஆரம்பத்தில், ஏராளமான மாணவர்கள் படித்து வந்தனர். ஆனால் தற்போது எண்ணிக்கை குறைந்த நிலையில், சேதமடைந்த கட்டடத்தில் தான் மாணவர்கள் படித்து வருகின்றனர்.
மழைக்காலங்களில் மழை நீர் ஒழுகுவது போன்ற பாதிப்பால் விடுமுறை அளிக்கப்படுகிறது. புதிய கட்டடம் வேண்டுமென நீண்ட கால கோரிக்கை வைத்த நிலையில், கடந்த 2009-10ம் ஆண்டு, இதே பகுதியில் எஸ்.எஸ்.ஏ., திட்டத்தின் கீழ் இரண்டு வகுப்பறைகள் கொண்ட புதிய பள்ளி கட்டடம் ரூ.6 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டது. ஆனால், புதிய கட்டடம் கட்டி முடித்தும், பயன்படுத்தாமல் மூடப்பட்டு கிடக்கிறது.
மின்சார வசதி போன்ற அடிப்படை வசதிகள் இல்லாததால் புதிய கட்டடத்துக்கு மாறாமல் இருந்தனர். நீண்ட காலத்துக்கு பிறகு கடந்த 2021ம் ஆண்டு புதிய பள்ளி கட்டடத்தை திறந்தனர்.
ஆனாலும், உரிய வசதிகள் இல்லாததால் அந்த பள்ளி கட்டடத்திற்கு மாணவர்கள் செல்லவில்லை. அந்த கட்டடமும் மூடியே கிடப்பதால் பராமரிப்பின்றி சிதைந்து கிடக்கிறது. அதில், சிமெண்ட் மேற்காரைகள் உடைந்து விழுந்துள்ளன. இதனால், பழைய நூற்றாண்டு கட்டடத்திலேயே பள்ளி இயங்கி வருகிறது.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:
புதிய பள்ளி கட்டடத்தின் அருகே ரூ.3 லட்சத்தில் கட்டிய சமையலறை புதிய கட்டடமும் வீணாகி கிடக்கிறது.
இது தொடர்பாக கிராம மக்களும், ஊராட்சி நிர்வாகம் தரப்பிலும் அரசுக்கு நீண்ட கால கோரிக்கை வைக்கப்பட்டும் நடவடிக்கை எடுத்தபாடில்லை. தற்போது, எந்த துறையும் இதனை கண்டுகொள்ளாமல் உள்ளது.
அதிகாரிகள் இப்பள்ளியை கிடப்பில் போட்டுள்ளதால், பழைய ஆபத்தான பள்ளிக்கூடத்தில் மாணவர்கள் படிக்கும் அச்ச நிலை தொடர்கிறது. இதனால், 50 மாணவர்களாக இருந்தது, தற்போது 25 மாணவர்களாக குறைந்துள்ளது.
இதற்கிடையில், கடந்த 2023-24ம் ஆண்டு புதிய கட்டடம் கட்டி தரப்படும் என அரசு தரப்பில் உறுதியளிக்கப்பட்டும், எந்த நடவடிக்கையும் இல்லை. இதனால், பழைய கட்டடத்தை இடித்து அகற்றிவிட்டு, புதிய கட்டடம் கட்டி தர வேண்டும். அதுவரை, ஏற்கனவே புதிதாக கட்டி சிதைந்து கிடக்கும் கட்டடத்தின் உறுதி தன்மையை ஆய்வு செய்து, புதுப்பித்து தர வேண்டும் என்று ஊராட்சி நிர்வாகம் தரப்பில், மனு கொடுத்து வருகிறோம்.
இவ்வாறு அவர் தெரிவித்தனர்.