/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
தடையின்மை சான்று வழங்காத தனியார் நிதி நிறுவனத்திற்கு அபராதம்
/
தடையின்மை சான்று வழங்காத தனியார் நிதி நிறுவனத்திற்கு அபராதம்
தடையின்மை சான்று வழங்காத தனியார் நிதி நிறுவனத்திற்கு அபராதம்
தடையின்மை சான்று வழங்காத தனியார் நிதி நிறுவனத்திற்கு அபராதம்
ADDED : அக் 24, 2025 03:28 AM
விழுப்புரம்: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், கடன் முழுவதும் செலுத்திய வாலிபருக்கு தடையின்மை சான்று வழங்காத தனியார் நிதி நிறுவனத்திற்கு அபராதம் விதித்து தீர்ப்பளிக்கப் பட்டது.
கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலுார், என்.ஜி.ஜி.ஓ., நகரை சேர்ந்தவர் வாசுதேவன் மகன் கமலஹாசன்,42; இவர், க டந்த சில ஆண்டுகளுக்கு முன் திருக்கோவிலுாரில் உள்ள தனியார் நிதி நிறுவனம் ஒன்றில், வாகன கடனாக ரூ.7 லட்சத்து 65 ஆயிரத்து 500 கடன் பெற்றுள்ளார்.
இந்த தொகை முழுவதையும் அவர் கடந்த ஜனவரி மாதம் செலுத்திய நிலையில், அவருக்கு அந்த தனியார் நிதி நிறுவனம் தடையின்மை சான்று வழங்கவில்லை. இதையடுத்து, கமலஹாசன், பலமுறை அந்த நிறுவனத்தை நேரில் அணுகி தடையின்மை சான்று கேட்டும் வழங்கவில்லை.
தொடர்ந்து, அவர் தன்னை அந்த தனியார் நிதி நிறுவனம் அலைக்கழிப்பு மற்றும் அலட்சியபடுத்துவதாக கூறி அந்நிறுவன கிளை மேலாளர், சென்னையில் உள்ள தலைமை அலுவலக மேலாளர் ஆகியோர் மீது விழுப்புரம் நுகர்வோர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கின் இறுதி விசாரணை முடிந்த நிலையில், நேற்று நீதிபதிகள் சதீஷ்குமார், அமலா, மீராமொய்தீன் ஆகியோர் கொண்ட அமர்வு தீர்ப்பளித்தது.
இந்த வழக்கில், அந்த தனியார் நிதி நிறுவனம் தடையின்மை சான்று வழங்க வேண்டும் என்றும், அந்த நிறுவனத்திற்கு ரூ.20 ஆயிரம் அபராதமும், வழக்கு செலவு தொகையாக மனுதாரருக்கு ரூ.10 ஆயிரம் வழங்க வேண்டும் என தீர்ப்பளித்தனர்.
தடையின்மை சான்று வழங்க தவறினால், அந்த நிறுவனம் தீர்ப்பு வெளியான நாளிலிருந்து நாள் ஒன்றுக்கு ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும் என தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

