/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
வெள்ள நீர் கடலில் கலந்து 30 டி.எம்.சி., தண்ணீர்... வீண்; சங்கராபரணி ஆற்றில் புதிய அணைகள் கட்டப்படுமா?
/
வெள்ள நீர் கடலில் கலந்து 30 டி.எம்.சி., தண்ணீர்... வீண்; சங்கராபரணி ஆற்றில் புதிய அணைகள் கட்டப்படுமா?
வெள்ள நீர் கடலில் கலந்து 30 டி.எம்.சி., தண்ணீர்... வீண்; சங்கராபரணி ஆற்றில் புதிய அணைகள் கட்டப்படுமா?
வெள்ள நீர் கடலில் கலந்து 30 டி.எம்.சி., தண்ணீர்... வீண்; சங்கராபரணி ஆற்றில் புதிய அணைகள் கட்டப்படுமா?
ADDED : அக் 25, 2025 06:13 AM

செஞ்சி: செஞ்சி பகுதி காடு மலைகளில் இருந்து கிடைக்கும் வெள்ளநீர் ஒவ்வொரு ஆண்டும் 30 டி.எம்.சி.,க்கும் அதிகமான அளவில், கடலில் கலந்து வீணாகி வருகிறது. இதை சேமிக்க புதிய அணைகளை கட்டவும், ஏற்கனவே உள்ள தடுப்பணைகளின் உயரத்தை அதிகரிக்கவும், துார்ந்து போன தடுப்பணைகளை துார் வாரவும் அரசு நடவடிக்கை எடுக்க கோரிக்கை எழுந்துள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் நீர்வளம், நிலவளம் இரண்டும் நிறைந்த பகுதியாக செஞ்சி, மேல்மலையனுார் தாலுகா உள்ளது.
விவசாயத்திற்காக முன்னோர்கள், 500க்கும் மேற்பட்ட ஏரிகளை கட்டி உள்ளனர். ஏரிகளுக்கு முக்கிய நீர் ஆதாரமாக இப்பகுதி மலைக்காடுகள் உள்ளன.
மிகப்பெரிய ஏரியான மேல்மலையனுார் ஏரியின் உபரி நீர் வெளியேறும் இடத்தில், சிறிய ஓடையாக சங்கராபரணி ஆறு துவங்குகிறது.
இதனுடன் சுற்று வட்டாரத்தில் உள்ள ஏரிகளின் உபரி நீரும் கலந்து ஆறாக உருமாறுகிறது. செவலபுரை அருகே வராகநதி, சங்கராபரணி ஆற்றில் கலந்து விடுகிறது.
செஞ்சியை அடுத்த தொண்டூர் ஏரி உபரி நீர் வெளியேறும் இடத்தில் துவங்கும் தொண்டியாறு, ரெட்டணை அருகே சங்கராபரணி ஆற்றில் கலக்கிறது. இதன் பிறகு சங்கராபரணி ஆறு புதுச்சேரி கடலில் கலக்கிறது.
அணைகள் சங்கராபரணி ஆற்றின் குறுக்கே கடந்த, 1959ம் ஆண்டு கட்டிய வீடூர் அணையும், செஞ்சி அருகே கூடப்பட்டில் கடந்த, 1915ல் ஆங்கிலேயர் கட்டிய தடுப்பணையும், கடந்த, 1979ம் ஆண்டு செவலபுரையில் 14 ஏரிகளுக்கு தண்ணீர் செல்ல கட்டிய தடுப்பணையும் உள்ளன.
ராஜாம்புலியூர், சிங்கவரம் மற்றும் புதிதாக மேல்களவாயில் இந்த ஆண்டு சிறிய தடுப்பணையும் கட்டி உள்ளனர்.
ராஜாம்புலியூர் தடுப்பணையில் இருந்து மொடையூர் ஏரிக்கு தண்ணீர் செல்கிறது. மற்றவை நீர் தேக்கி வைப்பதற்கான தடுப்புகளாக உள்ளன.
மலை காடுகள் செஞ்சி பகுதியில் உள்ள கெங்கவரம், பாக்கம், சிறுவாடி மலை காடுகளே, அப்பகுதியின் முக்கிய நீர் ஆதாரங்களாக உள்ளன.
கெங்கவரம் மலை காடு வெள்ளத்தால் பழவலம், மழவந்தாங்கல், மலையரசன்குப்பம், கெங்கவரம், கணக்கன்குப்பம், தாண்டவசமுத்திரம், துத்திப்பட்டு ஏரிகள் நிரம்புவதுடன் மிகப்பெரிய ஏரியான பனமலை ஏரிக்கும் முக்கிய நீர் ஆதாரமாக உள்ளது.
பாக்கம் மலை காடுகளில் உருவாகும் காட்டு வெள்ளம் வராகநதியாக உருவாகிறது. வராகநதி சிறுவாடி மலை காடுகள் வழியாக வரும் போது சிறுவாடி வெள்ளமும் சேர்ந்து விடும். இது சங்கராபரணி ஆற்றில் கலந்து வீடூர் அணைக்கு செல்கிறது.
32 ஆடி உயரம் உள்ள வீடூர் அணையின் மொத்த கொள்ளளவு 605 மில்லியன் கன அடி. சங்கராபரணி ஆறு துவங்கும் மேல்மலையனுாரில் இருந்து வீடூர் அணை வரை 75 கி.மீ., துாரத்தில் வேறு அணைகள் இல்லை.
ஆண்டு தோறும் வெள்ளம் சங்கராபரணி ஆற்றில் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர், நவம்பர், டிசம்பர் மாதங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்படுகிறது.
இதில் ஒரு வாரத்திற்கு வெள்ளம் சென்றதும் வீடூர் அணை நிரம்பி விடுகிறது. இதன் பிறகு நாள் ஒன்றுக்கு அரை டி.எம்.சி.,அளவிற்கு உபரிநீரை திறந்து விடுகின்றனர்.
ஒவ்வாரு ஆண்டும் இரண்டு மாதங்களுக்கு உபரி நீர் வெளியேறுகிறது. இதனால் ஆண்டு தோறும் குறைந்த பட்சம், 30 டி.எம்.சி., தண்ணீர் வீணாக கடலில் கலக்கிறது.
புதிய அணைகள் இல்லை கடந்த, 1979ம் ஆண்டுக்கு பிறகு சங்கராபரணி ஆற்றில் ஆய்வு நடத்தி புதிய அணைகளை கட்ட அரசு எந்த முயற்சியும் எடுக்க வில்லை.
சங்கராபரணியில் மூன்று மாதத்திற்கு வெள்ளம் சென்றாலும் அடுத்த மூன்றே மாதத்தில் வறட்சி ஏற்பட்டு விடுகிறது.
விவசாய கிணறுகளின் நீர்மட்டம் கிடு கிடு கீழே சென்று விடும். ஆண்டு தோறும் ஏப்ரல், மே மாதங்களில் பயிர்களுக்கு போதிய தண்ணீர் கிடைப்பதில்லை.
அதனால், தமிழக அரசின் நீர் ஆதாரத்துறை புதிய அணைகளை கட்டுவதற்கான சாத்திய கூறுகளை ஆய்வு செய்து வீணாகும் தண்ணீரை சேமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அத்துடன் தற்போதுள்ள அணைகளின் நீர் மட்டத்தை உயர்த்தி கூடுதலாக தண்ணீரை சேமிக்க வாய்ப்பு உள்ளதா என்பதையும் ஆய்வு செய்ய வேண்டும். துார்வாராமல் உள்ள தடுப்பணைகளை துார் வாரி கூடுதல் நீரை சேமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

