/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
பள்ளி செப்டிக் டேங்கில் தவறி விழுந்த சிறுமி பலி
/
பள்ளி செப்டிக் டேங்கில் தவறி விழுந்த சிறுமி பலி
ADDED : ஜன 04, 2025 05:51 AM

விக்கிரவாண்டி : விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி பழைய போலீஸ் ஸ்டேஷன் எதிரே உள்ள மெயின் ரோட்டை சேர்ந்தவர் பழனிவேல், 34. இவரது மனைவி சிவசங்கரி, 32. இவர்களது ஒரே மகள் லியா லட்சுமி, 4, விக்கிரவாண்டி செயின்ட் மேரீஸ் மெட்ரிக் மேல்நிலை பள்ளியில் எல்.கே.ஜி., படித்தார்.
நேற்று பகல், 12:00 மணிக்கு உணவு இடைவேளை போது சிறுவர்கள் வகுப்பறையில் இருந்து வெளியே விளையாடி, மீண்டும் வகுப்பறைக்கு சென்றனர்.
ஆனால், லியா லட்சுமி வரவில்லை. தேடியபோது, அருகில் இருந்த செப்டிக் டேங்க் மேல் மூடி தகரம் உடைந்திருந்தது. அதன் வழியே பார்த்த போது, செப்டிக் டேங்கிற்குள் குழந்தை கிடந்தது தெரிந்தது.
உடன் பள்ளி நிர்வாகத்தினர், சிறுமியை மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
அங்கு சிறுமியை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே இறந்து விட்டதை உறுதி செய்தனர்.
இந்த விபரம் தெரியாமல், வழக்கம் போல் சிறுமி லியா லட்சுமியை அழைத்துச் செல்ல அவரது தாத்தா கார்மேகம் பள்ளிக்கு வந்தபோது, பேத்தி செப்டிக் டேங்கில் விழுந்து இறந்தது தெரிந்தது.
தகவலறிந்து திரண்ட மாணவர்களின் பெற்றோர், பள்ளி நிர்வாகத்தின் அலட்சியத்தால் சிறுமி இறந்ததாக கூறி, விக்கிரவாண்டி வடக்கு பைபாசில் மறியலில் ஈடுபட்டனர். அவர்களிடம் போலீசார், உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியதை ஏற்று, 4:40 மணிக்கு மறியலை கைவிட்டு கலைந்தனர். இதனால், பைபாசில் 25 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.