/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
அரசு பஸ் சிறை பிடிப்பு செஞ்சி அருகே பரபரப்பு
/
அரசு பஸ் சிறை பிடிப்பு செஞ்சி அருகே பரபரப்பு
ADDED : மார் 14, 2026 05:24 AM

செஞ்சி: கிராமத்திற்கு பஸ் வசதி ஏற்படுத்தக்கோரி கடுகப்பட்டு கிராம மக்கள் அரசு பஸ்சை சிறை பிடித்து மறியலில் ஈடுபட்டனர்.
செஞ்சி அடுத்த கடுகப்பட்டு கிராமம் ஒலக்கூர் கூட்ரோட்டில் இருந்து 2 கி.மீ., துாரத்தில் உள்ளது. இந்த கிராமத்திற்கு பஸ் வசதி இல்லாததால் மாணவர்கள், வயதானவர்கள் உட்பட அனைவரும் கூட்ரோட்டில் இருந்து நடந்து செல்லும் அவலம் உள்ளது.
இரவு நகரத்தில் இருந்து வேலை முடித்து வரும் பெண்கள் மிகவும் அவதிப்படுகின்றனர். பஸ் வசதி கேட்டு கிராம சபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றி அரசுக்கு அனுப்பினர். இருப்பினும் பஸ் வசதி செய்யப்படவில்லை.
இதனால், ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் நேற்று காலை 10:30 மணியளவில் வெடாலில் இருந்து செஞ்சிக்கு வந்த அரசு டவுன் பஸ்ஸை ஒலக்கூர் கூட்ரோட்டில் ஊராட்சி தலைவர் சசிகலா மகேஷ் தலைமையில் 50க்கும் மேற்பட்டோர் வழி மறித்து சிறை பிடித்து மறியலில் ஈடுபட்டனர்.
சம்பவ இடத்திற்கு வந்த செஞ்சி சப் இன்ஸ்பெக்டர் ஆனந்தன், அரசு போக்குவரத்துக் கழக அதிகாரிகள் பேச்சு வார்த்தை நடத்தி, விரைவில் பஸ் வசதி செய்து தருவதாக உறுதி அளித்தனர்.
இதையடுத்து 11:50 மணியளவில் பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டனர்.

