/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
அரசு மருத்துவமனையில் கட்டண படுக்கை பிரிவு... அறிமுகம்; விழுப்புரத்தில் தயார் நிலையில் புதிய கட்டடம்
/
அரசு மருத்துவமனையில் கட்டண படுக்கை பிரிவு... அறிமுகம்; விழுப்புரத்தில் தயார் நிலையில் புதிய கட்டடம்
அரசு மருத்துவமனையில் கட்டண படுக்கை பிரிவு... அறிமுகம்; விழுப்புரத்தில் தயார் நிலையில் புதிய கட்டடம்
அரசு மருத்துவமனையில் கட்டண படுக்கை பிரிவு... அறிமுகம்; விழுப்புரத்தில் தயார் நிலையில் புதிய கட்டடம்
ADDED : அக் 29, 2025 07:52 AM

விக்கிரவாண்டி : விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் கட்டண வார்டு பிரிவு விரைந்து துவங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. அனைத்து தரப்பினருக்கும் மருத்துவ வசதியை வழங்க வேண்டும் என்ற நோக்கத்தில் மக்கள் நல்வாழ்வு துறை சார்பில் அரசு மருத்துவமனைகளில் தனியார் மருத்துவமனை போன்று கட்டண சிகிச்சை பிரிவு குறைந்த கட்டணத்தில் துவங்கப்பட உள்ளது.
ஆனால் மருத்துவமனை களில் அனைவருக்கும் ஒரே மருந்து தான் வழங்கப்படும். பொது வார்டில் இருக்க விரும்பாதவர்களின் தனி உரிமை வசதிக் காக கட்டணம் பெறப்பட்டு தனி அறை வழங்கப்படும்.
இதற்காக சென்னை, திருச்சி, திருவண்ணாமலை, சேலம், விழுப்புரம் உட்பட ஒரு சில அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைகளில் இதுபோன்ற கட்டண வார்டு பிரிவு விரைவில் துவங்கப்பட உள்ளது.
விழுப்புரம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் 48 லட்சம் ரூபாய் மதிப்பில் 10 கட்டண படுக்கைகள் கொண்ட பிரிவுக்கான பணிகள் துவங்கி முழுமையாக முடிக்கப்பட்டுள்ளது.
இந்த பிரிவில் தனி ஒருவர் தங்கும் வகையிலும், இருவர் சேர்ந்து தங்கும் வகையிலும், நான்கு பேர் சேர்ந்து தங்கும் வகையிலும் அறைகள் தனித்தனியாக பிரிக்கப்பட்டு 10 படுக்கைகள் தயார் செய்யப்பட்டு குளிர்சாதனம் மற்றும் 'டிவி' வசதியுடன் தயார் நிலையில் உள்ளது.
இந்த பிரிவில், தனி நபர் அறை, இரு நபர்கள் சேர்ந்து தங்கும் அறை, நான்கு நபர்கள் சேர்ந்து தங்கும் அறை என தனித்தனியாக அமைக்கப்பட்டுள்ள வார்டில் கட்டணமாக 750 ரூபாய், 1000 ரூபாய், 1200 என 3 பிரிவுகளில் கட்டணம் வசூலிக்க அரசு திட்டமிட்டுள்ளது. இது தவிர பிற சேவைகளுக்கு முதலமைச்சர் காப்பீடு திட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ள விதிமுறைகள் பின்பற்றப்பட உள்ளது.
இன்னும் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படாத நிலையில், தமிழகம் முழுதும் உள்ள அரசு மருத்துவமனைகளில் துவங்கப்பட்டுள்ள இதுபோன்ற கட்டண பிரிவு திட்டத்தை ஒரே நேரத்தில் துவங்க அரசு முடிவு செய்துள்ளது. இதனால், இதன் திறப்பு விழா தள்ளிப் போவதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
தற்போது மருத்துவமனையின் வார்டு முகப்பு பகுதியில் உள்ள கட்டடத்தின் அருகே துவங்கப்பட்டுள்ள இந்த பிரிவின் கட்டடத்தில் வைக்கப்பட்டுள்ள பெயர் பலகை பொதுமக்களுக்கு தெரியாத வகையில் உள்ளது.
எனவே, சம்மந்தப்பட்ட அதிகாரிகள் இதுபோன்ற ஒரு பிரிவு மருத்துவமனையில் துவங்கப்பட உள்ளது என்பதை பொதுமக்கள் அறியும் வகையில் பெயர் பலகையை வைப்பதுடன் இப்பிரிவை விரைந்து துவங்கி நோயாளிகளின் பயன்பாட்டிற்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

