/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
விழுப்புரத்தில் அரசு முதன்மைச் செயலர்... ஆய்வு; நிவாரண பொருட்கள் அனுப்பும் பணி தீவிரம்
/
விழுப்புரத்தில் அரசு முதன்மைச் செயலர்... ஆய்வு; நிவாரண பொருட்கள் அனுப்பும் பணி தீவிரம்
விழுப்புரத்தில் அரசு முதன்மைச் செயலர்... ஆய்வு; நிவாரண பொருட்கள் அனுப்பும் பணி தீவிரம்
விழுப்புரத்தில் அரசு முதன்மைச் செயலர்... ஆய்வு; நிவாரண பொருட்கள் அனுப்பும் பணி தீவிரம்
ADDED : டிச 06, 2024 05:11 AM

விழுப்புரம்: விழுப்புரத்தில் பிற மாவட்டங்களில் இருந்து பெஞ்சல் பாதித்த மக்களுக்கு வந்துள்ள நிவாரண பொருட்களை, அரசு முதன்மை செயலாளர் அமுதா ஆய்வு செய்து, முகாம்களுக்கு அனுப்பும் பணியை தீவிரப்படுத்தினார்.
விழுப்புரம் பெருந்திட்ட வளாகத்தில் உள்ள தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் பல்நோக்கு உள் விளையாட்டு அரங்கில், பிற மாவட்டங்களில் இருந்து பெஞ்சல் புயலால் பாதித்த பொதுமக்களுக்கு வழங்குவதற்காக நிவாரண பொருட்கள் வந்துள்ளது.
இந்த பொருட்களை நிவாரண முகாம்கள் மற்றும் பாதித்த பகுதிகளுக்கு பிரித்து அனுப்பும் பணியை வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை முதன்மைச் செயலர் அமுதா ஆய்வு செய்து, அந்தந்த பகுதிகளுக்கு அனுப்பும் பணியை தீவிரப்படுத்தினார்.
அதனைத் தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
விழுப்புரம் மாவட்டத்தில் பெஞ்சல் புயல் மற்றும் தென்பெண்ணை ஆறு வெள்ளப் பெருக்கால் பாதித்த பகுதிகளில் நிவாரண உதவி வழங்கும் வகையில் கணக்கீடு எடுக்கும் பணி மாவட்ட நிர்வாகம் மூலம் நடைபெற்று வருகிறது.
இன்று (நேற்று) முதல் மிகவும் பாதித்த பகுதிகளில் உள்ள மக்களுக்கு நிவாரண தொகை 2000 ரூபாய் வழங்கப்படுகிறது. பின், ரேஷன் கடைகள் மூலம் டோக்கன் வழங்கப்பட்டு இரண்டு அல்லது மூன்று நாட்களுக்குள் அனைவருக்கும் நிவாரண தொகை வழங்கப்படும்.
கடந்த 3 நாட்களாக பாதித்த மக்களுக்காக உணவு பொட்டலங்கள், குடிநீர், பால்பவுடர், பால் ஆகிய அத்தியவாசிய பொருட்கள் மாவட்ட நிர்வாகம் மூலம் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது.
பிற மாவட்டங்களில் இருந்து வரும் நிவாரண பொருட்கள் அனைத்தும் இந்த மையம் மூலம் அனைத்து நிவாரண முகாம்கள் மற்றும் பாதித்த பகுதிகளுக்கு உரிய அலுவலர்கள் மூலம் வாகனங்கள் மூலம் அனுப்பி வைத்து வழங்கப்படுகிறது.
விழுப்புரம் மாவட்டத்தை பொறுத்தவரை மின் இணைப்பு 7 பகுதிகளைத் தவிர மற்ற அனைத்து பகுதிகளிலும் சரிசெய்து மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக, குடிநீர் வசதி அனைத்து குடியிருப்புகளுக்கும் வழங்கப்பட்டு வருகிறது.
இம்மாவட்டத்தில் 135 பொது சமையல் கூடங்கள் மூலம் பாதித்த பகுதி மக்களுக்கு தொடர்ந்து உணவு மற்றும் உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு அமுதா கூறினார்.
மாவட்ட பிற்படுத்தப்பட்ட நல அலுவலர் தமிழரசன், தனித்துணை ஆட்சியர் ஜெகதீசன், துணை ஆட்சியர் (பயிற்சி) பிரேமி உடனிருந்தனர்.