/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
அரசு பஸ் பழுது: பயணிகள் தவிப்பு
/
அரசு பஸ் பழுது: பயணிகள் தவிப்பு
ADDED : ஜன 12, 2024 12:16 AM

விழுப்புரம்: சென்னையிலிருந்து திருச்சி நோக்கி வந்த அரசு பஸ் திண்டிவனத்தில் பழுதாகி நின்றதால் 2 மணி நேரம் பயணிகள் தவிப்புக்குள்ளாகினர்.
சென்னையிலிருந்து திருச்சி நோக்கி நேற்று பிற்பகல் புறப்பட்ட காஞ்சிபுரம் கோட்ட அரசு பஸ், மாலை 3:00 மணிக்கு, திண்டிவனம் வந்தது. அங்கு பயணிகளை இறக்கி விட்டு, விழுப்புரம் நோக்கி புறப்பட்ட பஸ், சற்று துாரத்தில் டீசல் பம்ப் பழுதாகி, டீசல் வழிந்து கீழே கொட்டியது.
இதனால், பஸ் நிறுத்தப்பட்டு, பயணிகளை வேறு பஸ்ஸில் மாற்றி விடுதற்காக பயணிகளை இறக்கி விட்டனர்.
இருப்பினும், 5:00 மணி வரை, திருச்சி நோக்கி வந்த அரசு பஸ்கள் கூட்டமாக வந்ததால், நிறுத்தாமல் சென்றனர். இதனால் பழுதான பஸ்சில் வந்த 60க்கும் மேற்பட்ட பயணிகள், இரண்டு மணி நேரம் காத்திருந்து தவித்தனர். அதன் பிறகு வந்த பஸ்களில் கொஞ்சம், கொஞ்சமாக பயணிகளை ஏற்றி அனுப்பி வைத்தனர். இதனால், பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.