குட்கா மூட்டைகள் பறிமுதல் 2 பேர் கைது: 400 கிலோ பறிமுதல்
குட்கா மூட்டைகள் பறிமுதல் 2 பேர் கைது: 400 கிலோ பறிமுதல்
ADDED : ஏப் 16, 2026 10:59 PM

விழுப்புரம்: பெங்களூருவிலிருந்து மினி டெம்போவில் புதுச்சேரிக்கு கடத்திச் செல்லப்பட்ட 400 கிலோ குட்காவை விழுப்புரம் போலீசார் பறிமுதல் செய்து 2 பேரை கைது செய்தனர்.
விழுப்புரம் தாலுகா இன்ஸ்பெக்டர் செல்வநாயகம், சப் இன்ஸ்பெக்டர் சண்முகம் மற்றும் போலீசார், நேற்று அதிகாலை விழுப்புரம் அருகே செஞ்சி நெடுஞ்சாலை பூத்தமேடு கூட்ரோட்டில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது, அந்த வழியாக வந்த மினி டெம்போ லோடு வாகனத்தை நிறுத்தி, சோதனை செய்தனர். அதில், 400 கிலோ குட்கா பாக்கெட்டுகள் மூட்டைகளில் பதுக்கி கடத்தி வந்தது தெரிந்தது.
டெம்போவில் வந்தவர்களிடம் விசாரித்ததில், ராஜஸ்தான் மாநிலம், ஜோலுார் பகுதியைச் சேர்ந்த வன்னராம் மகன் மகேந்திரகுமார், 26; கர்நாடகா மாநிலம், பெங்களூரு, காட்டன்பெட் மெயின் ரோடு அப்துல்லா மகன் சமீர், 38; என்பதும், இவர்கள், பெங்களூருவிலிருந்து புதுச்சேரிக்கு கடத்திச் சென்றதும் தெரியவந்தது.
உடன், போலீசார் வழக்குப் பதிந்து, மகேந்திரகுமார், சமீர் ஆகிய இருவரையும் கைது செய்து, 400 கிலோ குட்கா மற்றும் மினி டெம்போவையும் பறிமுதல் செய்தனர்.
