/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
பயிர் காப்பீடு திட்டத்தில் அறுவடை பரிசோதனை
/
பயிர் காப்பீடு திட்டத்தில் அறுவடை பரிசோதனை
ADDED : ஜன 29, 2024 06:21 AM

வானுார், : கிளியனுார் மற்றும் புதுக்குப்பம் கிராமத்தில் பிரதம மந்திரியின் பயிர் காப்பீடு திட்டத்தின் கீழ் தேர்வு செய்த நெல் வயலில் பயிர் அறுவடை பரிசோதனை நடந்தது.
வானுார் தாலுகாவில் கடந்த சம்பா பருவத்தில் 69 கிராமங்களில் நெல் காப்பீடு அறிவிக்கை செய்யப்பட்டு, 1853 ஏக்கரில் 701 விவசாயிகள் நெற்பயிரில் காப்பீடு செய்துள்ளனர். அதனைத் தொடர்ந்து சம்பா நெற்பயிர்கள் அறுவடைப் பணி துவங்கியது.
புதுக்குப்பம் மற்றும் கிளியனுார் பகுதிகளில், வேளாண்மைத் துறை மற்றும் இந்திய வேளாண் காப்பீடு நிறுவன அலுவலர்கள் இணைந்து நெல் சோதனை அறுவடை செய்யும் பணியை ஆய்வு மேற்கொண்டனர்.
தொடர்ந்து, வானுார் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் எத்திராஜ் கூறுகையில், 'ஜனவரி மாதம் பெய்த கனமழையின் காரணமாக அறுவடைக்குத் தயாராக இருந்த நெற்பயிர்கள், உப்புவேலுார் பிர்கா கிராமங்களில் அதிகளவு பாதிக்கப்பட்டுள்ளன.
இதற்கு அரசு மூலம் உரிய இழப்பீடு பெற்றுத் தர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மேலும் சம்பா பருவத்தில் காப்பீடு செய்த விவசாயிகளுக்கும் உரிய பயிர் காப்பீடு இழப்பீடு தொகை பெற்றுத் தர அனைத்து அறிவிக்கை செய்யப்பட்ட கிராமங்களிலும் நெற்பயிர் அறுவடை பரிசோதனை செய்யும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதன் அடிப்படையில் கிராமங்களில் மகசூல் இழப்பு அடிப்படையில் காப்பீட்டு நிறுவனங்களிலிருந்து இழப்பீடு பெற்றுத்தர நடவடிக்கை மேற்கொள்ளப்படும்' என்றார்.
ஆய்வின் போது உதவி வேளாண்மை அலுவலர்கள் தங்கம், பஞ்சநாதன், பயிர் அறுவடை பரிசோதனையாளர்கள் திவ்யா, மகாலட்சுமி, காப்பீட்டு நிறுவன அலுவலர்கள் அருண், அஜித்குமார் உடனிருந்தனர்.