/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
விழுப்புரம் மாவட்டத்தில் கனமழையால் 860 வீடுகள் சேதம்: 14 பேர் பலி, 446 கால்நடைகள் உயிரிழந்த பரிதாபம்
/
விழுப்புரம் மாவட்டத்தில் கனமழையால் 860 வீடுகள் சேதம்: 14 பேர் பலி, 446 கால்நடைகள் உயிரிழந்த பரிதாபம்
விழுப்புரம் மாவட்டத்தில் கனமழையால் 860 வீடுகள் சேதம்: 14 பேர் பலி, 446 கால்நடைகள் உயிரிழந்த பரிதாபம்
விழுப்புரம் மாவட்டத்தில் கனமழையால் 860 வீடுகள் சேதம்: 14 பேர் பலி, 446 கால்நடைகள் உயிரிழந்த பரிதாபம்
ADDED : டிச 05, 2024 07:10 AM

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில், பெஞ்சல் புயல் தாக்கத்தால் ஏற்பட்ட கனமழை வெள்ளத்தில் 860 வீடுகள் இடிந்து பாதிக்கப்பட்டது. வெள்ளத்தில் சிக்கி 14 பேர் பலியானதோடு, 446 கால்நடைகளும் உயிரிழந்தன.
விழுப்புரம் மாவட்டத்தில், பெஞ்சல் புயல் தாக்கத்தால், கடந்த 30ம் தேதி தொடங்கி இரு தினங்கள் சூறைக்காற்றுடன் கனமழை பெய்தது. வரலாறு காணாத வகையில், மாவட்டம் முழுவதும் 65.5 சென்டி மீட்டர் மழையளவு பதிவானது. இதனால், மாவட்டம் முழுவதும் ஆறுகள், நீர்வரத்து வாய்க்கால்களில் வெள்ளநீர் பாய்ந்து பெரும் சேதத்தை ஏற்படுத்தியது.
மாவட்டம் முழுவதும் சூறைக்காற்று கனமழை பாதிப்பில் கூரைகள் பெயர்ந்தும், சுவர்கள் இடிந்து விழுந்தும் 728 வீடுகள் பகுதியளவில் பாதிக்கப்பட்டது. 132 வீடுகள், சுவர் இடிந்து விழுந்து முழுவதும் பாதிக்கப்பட்டது. மொத்தம் 860 வீடுகள் சேதமடைந்தன.
கனமழை மற்றும் சங்கராபரணி, தென்பெண்ணை ஆறுகளில் ஏற்பட்ட வெள்ள நீர் குடியிருப்புகளில் புகுந்ததில், வீடுகளின் சுவர் இடிந்தும், ஏரி, வாய்க்கால், குட்டையில் மூழ்கியும் என 14 பேர் பலியாகினர். அதில், விக்கிரவாண்டியில் 6 பேர் இறந்தனர். கனமழையில் 37 மாடுகளும், 57 கன்று குட்டிகளும் 352 ஆடுகளும் என 446 கால்நடைகள் இறந்தன. மேலும், கோழி பண்ணைகளில் வெள்ள நீர் புகுந்ததில் 82 ஆயிரத்து 900 கோழிகளும் இறந்துபோயின.
மாவட்டத்தில் உள்ள பொதுப்பணித்துறைக்கு சொந்தமான 506 ஏரிகளும், ஊரக வளர்ச்சித் துறைக்குச் சொந்தமான 780 ஏரிகளும், 600க்கும் மேற்பட்ட குளங்களும் முழுவதுமாக நிரம்பியுள்ளன.
கனமழை, புயல் தாக்கத்தில் 191 மரங்களும், 416 மின் கம்பங்களும் ஒடிந்து விழுந்தன. 32 டிரான்ஸ்பார்மர்களும் சேதமடைந்து பாதிக்கப்பட்டன. விழுந்த மரங்கள் அகற்றப்பட்டன. இந்த இடங்களில், திருச்சி கோவை உள்ளிட்ட பகுதியிலிருந்து வந்த மின் ஊழியர்கள் 3 நாள்களாக சீரமைப்பு பணிகள் மேற்கொண்டு 70 சதவீதம் இடங்களில் மின்சார இணைப்பை வழங்கியுள்ளனர்.
மாவட்டத்தில் 57 இடங்களில், சுரங்கப்பாதையில் மழைநீர் மூழ்கி பாதிக்கப்பட்டது. அங்கு தண்ணீர் வெளியேற்றும் பணிகள் 80 சதவீதம் முடிந்துள்ளது. 170 கிராமங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. அங்கு குடிநீருக்காக ஜெனரேட்டர் வைத்து, குடிநீர் ஏற்றும் பணி நடந்தது. 21 டேங்கர் லாரி மூலம் குடிநீர் விநியோகமும் நடந்துள்ளது.
நெடுஞ்சாலைகளில் 25 இடங்களில் துண்டிப்பு ஏற்பட்டு பெரிய பள்ளங்களும், 25 இடங்களில் கழிவுநீர் கால்வாய் உடைப்பும் ஏற்பட்டது. 52 சிறுபாலங்கள் உடைந்தன. 42 தொடக்கப் பள்ளிகள், 48 சமுதாயக்கூடங்கள், 74 அங்கன்வாடி மையங்கள், 12 ஊராட்சி மன்ற கட்டிடங்கள், 5 பாலங்கள், 3 சர்வீஸ் சாலைகள் சேதமடைந்து பாதிக்கப்பட்டன. மேலும், பாதிக்கப்பட்ட பகுதிகளில், அரசு சார்பில் மீட்பு பணிகள் நடந்து வருகிறது.
மாவட்டத்தில் 67 புயல் மீட்பு முகாம்களை அமைத்து 4,950 பேர் தங்க வைக்கப்பட்டு, அவர்களுக்கு இரு தினங்கள் உணவு வழங்கி மீட்பு பணிகள் நடைபெற்றது. அதில் 4000 பேர் மீண்டும் தங்கள் வீடுகளுக்கு திரும்பியுள்ளனர். ஊரக வளர்ச்சித் துறை மூலம் 46 ஆயிரத்து 200 உணவு பாக்கெட்டுகள் வழங்கப்பட்டுள்ளது.