ADDED : ஆக 17, 2026 08:42 PM
அவலுார்பேட்டை: மேல்மலையனுார் பகுதியில் கடைகளில் விதிமீறி பட்டாசு விற்பதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
மேல்மலையனுார், அவலுார்பேட்டை, வளத்தி உள்ளிட்ட பகுதிகளில் தச்சு தொழில் செய்யும் மரப்பட்டறைகள் உள்ளன. மரம் அறுக்கும் வாள் பட்டறைகளும் உள்ளன. இந்நிலையில், சாமி ஊர்வலத்திற்கும், திருமணம் போ்னற சுப நிகழ்ச்சிகளுக்கும், துக்க நிகழ்ச்சிக்கும், கிரிக்கெட், தேர்தலில் வெற்றி, அரசியல் பிரமுகர்கள் வருகை போன்றவைகளுக்கெல்லாம் பலர் அடிக்கடி பட்டாசு வெடித்து கொண்டாடுகின்றனர். இதனால், மரப்பட்டறைகள் மற்றும் சாதாரண கடைகளில் தற்போது விதவிதமான பட்டாசுகள் கடைக்கு எதிரே அடுக்கி விற்பனை செய்து வருகின்றனர்.இந்த பட்டாசுகளில் திடீரென தீ விபத்து ஏற்பட்டால், தீ அணைக்கும் முன்னேற்பாடுகளும் இல்லை.இதனால், ஆபத்தான சூழல் உள்ளது. பொது மக்கள் நலன் கருதி, வருமுன் காப்போம் என்ற அடிப்படையில், பட்டாசு விற்கும் கடைகள், மரப்பட்டறைகள் போன்ற இடங்களில், தீயணைப்பு துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் பாதுகாப்புகள் குறித்து ஆய்வு நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
