/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
விக்கிரவாண்டியில் மாணவி பலியான சம்பவம்; தனியார் பள்ளிகளில் அதிகாரிகள் குழு திடீர் ஆய்வு
/
விக்கிரவாண்டியில் மாணவி பலியான சம்பவம்; தனியார் பள்ளிகளில் அதிகாரிகள் குழு திடீர் ஆய்வு
விக்கிரவாண்டியில் மாணவி பலியான சம்பவம்; தனியார் பள்ளிகளில் அதிகாரிகள் குழு திடீர் ஆய்வு
விக்கிரவாண்டியில் மாணவி பலியான சம்பவம்; தனியார் பள்ளிகளில் அதிகாரிகள் குழு திடீர் ஆய்வு
ADDED : ஜன 07, 2025 07:28 AM

விழுப்புரம்; விக்கிரவாண்டியில் எல்.கே.ஜி., மாணவி கழிவுநீர் தொட்டியில் விழுந்து இறந்த சம்பவத்தையடுத்து, விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளிகளில், அதிகாரிகள் குழுவினர் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
விழுப்புரம் அடுத்த விக்கிரவாண்டி தனியார் பள்ளியின் கழிவுநீர் தொட்டியில் எல்.கே.ஜி., மாணவி விழுந்து பலியான சம்பவத்தையடுத்து, அனைத்து தனியார் பள்ளிகளிலும் பாதுகாப்பு விதிகளை பின்பற்ற அரசு உத்தரவிட்டுள்ளது.
அதையொட்டி, விழுப்புரம் மாவட்டத்தில் கலெக்டர் பழனி உத்தரவின் பேரில் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி தலைமையில், தலா ஒரு மாவட்ட கல்வி அலுவலர், தலைமை ஆசிரியர், பி.ஆர்.சி., ஆசிரியர்கள் கொண்ட 30 குழுவினர் நேற்று முதல் தனியார் பள்ளிகளில் சோதனையை தொடங்கியுள்ளனர்.
சி.இ.ஓ., அறிவழகன் தலைமையிலான குழுவினர் விழுப்புரம் இ.எஸ்., மேல்நிலை பள்ளியில் வகுப்பறை, கழிவறை, கழிவுநீர் தொட்டி, குடிநீர் தொட்டி, சுற்றுச்சுவர், சி.சி.டி.வி.,க்களை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். பள்ளி முதல்வர், ஆசிரியர்களிடம் பள்ளி விதிமுறைகள், பாதுகாப்பு நிலவரங்கள் குறித்து விசாரித்தனர்.
சி.இ.ஓ., அறிவழகன் கூறியதாவது:
விக்கிரவாண்டி தனியார் பள்ளியில் நடந்த துயர சம்பவம், வரும் காலங்களில் நடைக்காமல் தடுத்திட, மாவட்டத்தில் உள்ள 148 தனியார் பள்ளிகளில் கல்வி அதிகாரிகளின் ஆய்வு தொடங்கியுள்ளது. அரசின் வழிகாட்டு நெறிமுறைகள்படி, பள்ளி வளாகம், வகுப்பறை, கழிப்பிடம் உள்ளிட்ட இடங்களில் பாதுகாப்பினை உறுதி செய்திட அனைத்து வித கட்டமைப்புகளையும் பார்வையிட்டு, ஆய்வு செய்யப்படுகிறது.
அதில் குறைபாடுகள் இருந்தால் அதனை ஒரு வாரத்திற்குள் சரி செய்திட அறிவுறுத்தப்படும். அதன்பிறகு நடக்கும் ஆய்வில் குறைபாடு கண்டறியப்பட்டால், தனியார் பள்ளிகள் ஒழுங்குமுறை சட்ட விதிகள்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இதேபோன்று, மாவட்டத்தில் உள்ள 100 நர்சரி பள்ளிகளிலும் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும். பள்ளி வாகனங்கள் பராமரிப்புக்கும் தனியாக அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.
தனியார் பள்ளிகளில் புகார் பெட்டி அவசியம்
பள்ளிகளை புதுப்பித்து அங்கீகாரம் பெற வேண்டும். அங்கீகாரமில்லாமல் எந்த பள்ளியும் இயங்கக் கூடாது. பள்ளி வளாகத்தில் சி.சி.டி.வி., கட்டாயம் வேண்டும், மின் சாதனங்கள் போன்ற ஆபத்தானவை கண்காணிப்பில் இருக்க வேண்டும், அசம்பாவிதம் நடந்தால், கல்வித்துறைக்கும் பெற்றோர்களுக்கும் தகவல் தர வேண்டும்.
அரசு பள்ளிகளில் உள்ளதை போல், மாணவர்கள் கருத்தினை ரகசியமாக தெரிவிக்க தனியார் பள்ளிகளிலும் புகார் பெட்டி அவசியம் வைக்க வேண்டும், அதனை தினசரி ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
மாவட்ட கல்வி அலுவலர் சண்முகவேல் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.