UPDATED : செப் 02, 2026 11:04 PM
ADDED : செப் 02, 2026 09:54 PM
வானுார்: ஓங்கூர் தட்சசீலா பல்கலைக்கழகத்தின் பி.எஸ்.சி. வேளாண்மை நான்காம் ஆண்டு மாணவர்கள் சார்பில், தேவனுார் கிராமத்தில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
ஓங்கூர் தட்சசீலா பல்கலைக்கழகத்தின் பி.எஸ்.சி. வேளாண்மை நான்காம் ஆண்டு மாணவர்கள், கிராமப்புற வேளாண்மை அனுபவ பயிற்சி திட்டத்தின் ஒரு பகுதியாக, மேல்மலையனுார் ஒன்றியத்திற்குட்பட்ட தேவனுானூர் கிராமத்தில் மரபியல் மற்றும் தாவர இனப்பெருக்கம் தொடர்பான விளக்க கண்காட்சி மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தினர்.
மரபியல் மற்றும் தாவர இனப்பெருக்க துறைத்தலைவர் திருமேனி, விரிவாக்க கல்வித்துறை பேராசிரியர் குமார் உள்ளிட்டோரின் வழிகாட்டுதலின் கீழ் நடந்த இந்த நிகழ்ச்சியில் நெல், கம்பு, சோளம் உள்ளிட்ட பல்வேறு பயிர்களின் ரகங்கள் காட்சிப்படுத்தப்பட்டு, மரபியல் அரிப்பு மற்றும் உட்பெருக்க தளர்ச்சி பற்றிய விளக்கங்கள் அளித்தனர்.
மரபியல் மற்றும் தாவர இனப்பெருக்கத் துறையை சேர்ந்த மாணவர் லட்சுமணன், விவசாயிகளுக்கு மரபியல் அரிப்பு, உட்பெருக்க தளர்ச்சி மற்றும் அவற்றை தடுக்கும் முறைகள் குறித்து விரிவாக விளக்கினார். தொடர்ந்து, வீரிய ஒட்டு விதை உற்பத்தி முறைகள் குறித்து செயல் விளக்கம் அளிக்கப்பட்டது.
இதில், 10 மாணவர்கள் கொண்ட குழுவினர் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்து விவசாயிகளுக்கு தொழில்நுட்ப ஆலோசனைகள் வழங்கினர்.
இந்த நிகழ்ச்சியில் தேவனுார் கிராமத்தை சேர்ந்த விவசாயிகள், பெண்கள் சுயஉதவிக் குழு உறுப்பினர்கள் மற்றும் இளைஞர்கள் பங்கேற்று பயனடைந்தனர்.
