திண்டிவனம் : பொங்கல் பண்டிகையின் போது, அனைவரது வீட்டிலும் கரும்பு வைத்து சுவாமிக்கு படைப்பது வழக்கம். பொங்கல் பண்டிகையான நேற்று திண்டிவனம் பகுதியில் இதுவரை எப்போதும் இல்லாத அளவிற்கு கரும்பு ஜோடி தரத்திற்கேற்ப 100 லிருந்து அதிகபட்சமாக 200 ரூபாய் வரை விற்பனையானது.
வழக்கமாக பொங்கல் பண்டிகையின் போது, அதிக அளவில் கரும்பு விற்பனை நடைபெறும். ஆனால் நேற்று நேரு வீதி, செஞ்சி ரோடு, உள்ளிட்ட இடங்களில் குறைந்த அளவிலான கரும்புகளே விற்பனை ஆனது.
கரும்பு விலை உயர்வு குறித்து வியாபாரிகள் கூறுகையில், 'பல மாவட்டங்களில் கரும்பு விளைச்சல் குறைவாக இருந்தது. சமீபத்தில் வீசிய மிக்ஜாம் புயலால் கரும்பு தோட்டங்களும் பாதிக்கப்பட்டது.
இதுமட்டுமின்றி, ரேஷன் கடைகளில் கரும்பு முன்கூட்டியே வழங்கப்பட்டதால், பொங்கல் விற்பனைக்கு கரும்பு குறைவாக கிடைத்தது. இதனால் பலர் தேனி மாவட்டத்திலிருந்து கரும்பு லோடை லாரிகள் மூலம் கொண்டு வந்ததால் அதிக விலைக்கு விற்க வேண்டிய நிலை ஏற்பட்டது' என்றனர்.