டிரான்ஸ்பார்மரில் காப்பர் கம்பி திருட்டு அதிகரிப்பு! மாவட்ட விவசாயிகள் பெரிதும் பாதிப்பு
டிரான்ஸ்பார்மரில் காப்பர் கம்பி திருட்டு அதிகரிப்பு! மாவட்ட விவசாயிகள் பெரிதும் பாதிப்பு
UPDATED : ஜூலை 21, 2026 03:42 PM
ADDED : ஜூலை 21, 2026 03:40 PM

திண்டிவனம்: விழுப்புரம் மாவட்டத்தில் பல இடங்களில் கிராமங்களில் விவசாய பயன்பாட்டிற்காக அமைக்கப்பட்டுள்ள டிரான்ஸ்பார்மர்களிலிருந்து காப்பர் கம்பி திருடும் கும்பலின் கைவரிசையால் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். விழுப்புரம் மாவட்டத்தில் பல இடங்களில் விவசாய நிலங்களுக்கு மத்தியில் விவசாயிகளின் பயன்பாட்டிற்காக மின்வாரியம் டிரான்ஸ்பார்மர்கள் அமைத்துள்ளது.
சமீப காலமாக ஆள் அரவமற்ற ஒதுக்குப்புறமாக உள்ள இடங்களில் உள்ள டிரான்ஸ்பார்மர்களில் இருந்து காப்பர் கம்பி திருடு போவது அதிகரித்துள்ளது.
குறிப்பாக மரக்காணம், பிரம்மதேசம், மயிலம், ரோஷணை, ஒலக்கூர், விக்கிரவாண்டி பகுதிகளில் திருட்டு சம்பவம் தொடர் கதையாக உள்ளது. ஒவ்வொரு டிரான்ஸ்பார்மரிலும் குறைந்தது 80 கிலோ எடையுள்ள காப்பர் கம்பி உள்ளது.
இந்த காப்பர் கம்பி கிலோ 1,000 ரூபாய் வரை விற்கப்படுவதால், ஒரு டிரான்ஸ்பார்மரில் உள்ள காப்பர் கம்பி மூலம் குறைந்து 80 ஆயிரம் ரூபாய் வரை கிடைக்கிறது.
மாவட்டத்தில் மட்டும் கடந்த 6 மாதங்களில் 15 இடங்களில் காப்பர் கம்பி ஒரு டன் அளவில் திருடு போனதாக மின்வாரிய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில் திண்டிவனம் அடுத்த கீழ்ஆதனுார் கிராமத்தில் கடந்த 2 நாட்களுக்கு முன் காப்பர் கம்பி திருட்டு கும்பல் கைவரிசையை காட்டியுள்ளது. டிரான்ஸ்பார்மர் செயல்படாமல் உள்ளதால், அந்த கிராமத்திலுள்ள 300 ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ள விவசாய பயிர்கள் மின் சப்ளை இல்லாததால் கருகும் நிலை ஏற்பட்டுள்ளது. ஒலக்கூர் போலீசில் மின்துறை சார்பில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே கடந்த மே மாதம் 15ம் தேதி, ஒலக்கூர், ரோஷணை, மயிலம் ஆகிய இடங்களிலுள்ள 200 கிலோ காப்பர் கம்பி திருடிய வழக்கில் தொடர்புடைய திண்டிவனம் அடுத்த நத்தமேடு நரிக்குறவர் காலனியைச் சேர்ந்த மைக்கேல், 19; சூர்யா, 24; அரவிந்த், 19; ஆகிய 3 பேரை கைது செய்தனர். இவர்கள், பல்வேறு இடங்களில் அதிகாலையில் மின்சப்ளையை நிறுத்தி விட்டு, காப்பர் கம்பிகளை லாவகமாக திருடுவது தெரியவந்தது.
மேலும், இவர்கள், செய்யாறு, விழுப்புரம், கடலுார் உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் கும்பலுடன் நெட்வொர்க் வைத்துக் கொண்டு காப்பர் கம்பிகளை தொடர்ந்து திருடி வருவது விசாரணையில் தெரியவந்துள்ளது.
காப்பர் கம்பிகளைத் திருடி விற்பனை செய்யும் தொழிலில் அதிக பணம் கிடைப்பதால், அந்த தொழிலில் மும்முரமாக இறங்கியிருப்பதும் தெரியவந்தது.
சில நாட்களுக்கு முன் செய்யாறு பகுதியில் ஒரே சமயத்தில் காப்பர் கம்பி திருட்டு வழக்கில் தொடர்புடைய 18 பேரை போலீசார் கைது செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.
டிரான்ஸ்பார்மரில் காப்பர் கம்பி திருடு போனால் அதனை மின்வாரியம் சீரமைப்பதற்குள் மின்சாரம் இன்றி தண்ணீர் பாய்ச்ச முடியாமல் பயிர்கள் வாடி கருகிப் போவதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.
டிரான்ஸ்பார்மரில் உள்ள காப்பர் கம்பிகளை திருடும் கும்பல் மீது எஸ்.பி., கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் மத்தியில் கோரிக்கை விடுத்துள்ளனர்.
