பருவநிலை மாற்ற பாதிப்பை தவிர்க்க வேளாண்துறை அறிவுறுத்தல்:குறுகிய கால பயிர் சாகுபடி செய்ய ஆலோசனை
பருவநிலை மாற்ற பாதிப்பை தவிர்க்க வேளாண்துறை அறிவுறுத்தல்:குறுகிய கால பயிர் சாகுபடி செய்ய ஆலோசனை
UPDATED : செப் 08, 2026 11:07 PM
ADDED : செப் 08, 2026 07:50 PM

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில், பருவநிலை மாற்ற பாதிப்பை தவிர்க்க, குறுகிய கால நெல் பயிர், தானியங்கள் போன்ற மாற்றுப்பயிர்களை செய்ய ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.
விழுப்புரம் மாவட்டத்தில், பருவநிலை மாற்றத்தின் வறட்சி காரணமாக விவசாயிகள் பயிரிடும் பரப்பு குறைகிறது. ஆண்டுதோறும் தென்மேற்கு பருவ மழையினால் 356.66 மி.மி மழை கிடைக்கும். இந்தாண்டில் 178.38 மி.மி., மழை மட்டுமே கிடைத்துள்ளது.
இந்தாண்டில், ஆகஸ்ட் மாதம் வரை 21,406 எக்டர் நெல் சாகுபடி, 8,866 எக்டர் சிறுதானிய பயிர், 1233 எக்டர் பயறு வகைகள், 14,117 எக்டர் எண்ணெய் வித்து,10,253 எக்டர் கரும்பு சாகுபடி, என 55,876 எக்டர் பரப்பில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. ஆனால், போதிய மழையின்மையால், நடப்பு சம்பா சாகுபடி பாதிப்பு ஏற்படும் என்பதால், விவசாயிகள் நீண்ட நாள் பயிர் சாகுபடிக்கு மாற்றாக, குறுகிய கால மற்றும் இடைக்கால நெல் ரகங்கள், கம்பு, திணை, உளுந்து, மணிலா போன்ற குறுகிய கால தானிய பயிர்களை சாகுபடி செய்ய வேளாண் துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.
விழுப்புரம் மாவட்ட வேளாண் அதிகாரிகள் கூறியதாவது:
போதிய மழையின்மையை கருத்தில் கொண்டு, விவசாயிகள் நலன் கருதி, தமிழக அரசு நெல் உற்பத்தி மற்றும் விதை வினியோகத்திற்கான சிறப்பு திட்டத்தின் கீழ், நெல் விதைகள், கிலோவுக்கு 10 முதல் 20 ரூபாய் வரை மானியத்தில், அனைத்து வேளாண்மை மையங்களிலும் வினியோகம் செய்யப்பட்டு வருகின்றன.
போதிய நீர் பாசனம் உடைய விவசாயிகள், சம்பா பருவத்தில், அனைத்து வேளாண்மை மையங்களிலும், இருப்பிலுள்ள (சி.ஆர்.,-1009-ரகம் 85.03 மெட்ரிக் டன், பி.பி.டி., ரகம்-13.09 மெட்ரிக் டன்) நீண்ட கால நெல் ரகங்களை மானிய விலையில் பெற்று பயன் பெறலாம். நிலத்தடி நீர் குறைந்த, கிணற்றில் போதிய நீர் கிடைக்காத விவசாயிகள், நீண்டகால நெல் ரகங்களை தவிர்த்து, பின் சம்பா காலத்திற்கு ஏற்ற கீழ்கண்ட குறுகிய மற்றும் இடைகால நெல் ரகங்களை வாங்கி பயன்படுத்தலாம்.
இடைக்கால நெல் ரகங்கள் இருப்பு 132.45 மெ.டன், வெள்ளை பொன்னி 90.40 மெ.டன், ஏடிடீ-54 ரகம் 28.4 மெ.டன், என்.எல்.ஆர்.3., ரகம் 10.13 மெ.டன், குறுகிய கால நெல் ரகங்கள் மொத்த இருப்பு 105.3 மெ.டன் ஆகும்.
மேலும், ஏ.டி.டீ., 37 ரகம் -23.51 மெ.டன், ஏ.டி.டீ., 53 ரகம் -15.83 மெ.டன், ஏ.டி.டீ.,57 ரகம் -6.40 மெ.டன், கோ-51 ரகம் 9.94 மெ.டன், கோ-55 ரகம் 44.12 மெ.டன், டிபிஎஸ்-5 ரகம் -5.62 மெ.டன் இருப்பு உள்ளது.
சிறு தானியங்கள் பயிரிடலாம் மானாவாரி நிலம் மற்றும் மழைப்பொழிவை நம்பியுள்ள விவசாயிகள், நெற்பயிர்களுக்கு மாற்றாக குறைந்த நீர் தேவை உடைய சிறுதானியங்கள், பயறு வகைகள், எண்ணெய் வித்து பயிர்களை சாகுபடி செய்து பயன்பெறலாம். இதற்கான விதைகளும், அனைத்து வேளாண்மை மையங்களிலும் இருப்பு உள்ளதால், தேவைப்படும் விவசாயிகள் பெற்று பயன்பெறலாம்.
உளுந்து விதை இருப்பு: 267.75 மெ.டன், வம்பன்-10 ரகம் 184.56 மெ.டன், வம்பன் -11 ரகம் 52.14 மெ.டன், வம்பன்-8 ரகம் 22.12 மெ.டன், கம்பு ( ஏ.பி.வி., 04) விதை 21.645 மெ.டன், திணை விதை ( ஏ.டி.எல்., 1 )-4.467 மெ.டன், மணிலா விதை ரகங்கள் 64.75 மெ.டன், மணிலா வி.ஆர்.ஐ., 10 ரகம் 36.19 மெ.டன், கிர்னார்-4 ரகம் 11.5 மெ.டன், கிர்னார்-5 ரகம் 14.187 மெ.டன் இருப்பு உள்ளது.
விவசாயிகள், பருவநிலை மாற்றத்தினை எதிர்கொள்ள, சொட்டுநீர் பாசனம், தெளிப்பு நீர் பாசனங்கள் பயன்படுத்தி, குறுகிய கால பயிர் சாகுபடி செய்து பயன்பெறலாம். இதற்கான விதைகள் அனைத்து வேளாண்மை மையங்களிலும், மானிய விலையில் வழங்கப்படுகிறது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
