ADDED : டிச 13, 2025 05:54 AM

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் உலக மாற்றுத் திறனாளிகள் தின விழா அரசு சட்டக்கல்லுாரி கூட்டரங்கில் நடந்தது.
கூட்டத்திற்கு, கலெக்டர் ஷேக் அப்துல் ரஹ்மான் தலைமை தாங்கி, பேசுகையில், 'இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு பிரதிநிதித்துவம் வழங்கிடும் வகையில் நியமன பதவிகள் வழங்கப்பட்டுள்ளது.
மாற்றுத் திறனாளிகள் நலத்துறை மூலம் கல்வி பயிலும் மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்பட்ட கல்வி உதவிதொகையை இரு மடங்களாக உயர்த்தி வழங்கப்படுகிறது' என்றார்.
நிகழ்ச்சியில், மாற்றுத் திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக மருத்துவ சேவை புரிந்த டாக்டர்கள், மாற்றுத் திறனாளி பணியாளர்கள், மாவட்ட அளவில் நடந்த ஓவிய போட்டியில் வென்ற மாற்றுத் திறனாளிகள், தொண்டு நிறுவனங்களை பாராட்டி சான்றிதழ் வழங்கப்பட்டது.
தொடர்ந்து மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகள் கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்று அவர்களின் திறமைகளை வெளிப்படுத்தினர்.
உதவி ஆட்சியர் (பயிற்சி) வெங்கடேஷ்வரன், விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை குடிமை டாக்டர் ரவிக்குமார், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் ராஜசேகர், அரசு சட்டக்கல்லுாரி முதல்வர் கிருஷ்ணலீலா உட்பட அலுவலர்கள், சிறப்பு பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.

