/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
இருளர் பழங்குடியினருக்கு சாதி சான்றிதழ் வழங்கல்
/
இருளர் பழங்குடியினருக்கு சாதி சான்றிதழ் வழங்கல்
ADDED : நவ 28, 2024 07:18 AM
விழுப்புரம்: விழுப்புரம் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை சார்பில், சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
திருவெண்ணெய்நல்லுார் தாலுகா, டி.எடையார் கிராமத்தைச் சேர்ந்த இருளர் பழங்குடியினர் மக்களுக்கு சாதி சான்றிதழை, கலெக்டர் பழனி வழங்கினார்.
பின்னர், கலெக்டர் கூறுகையில், தமிழக முதல்வர் உத்தரவின்படி பழங்குடியின மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில், மின்னணு குடும்ப அட்டை, ஆதார் அட்டை, சாதிச்சான்றிதழ், இருப்பிடச்சான்றிதழ், வருமானச் சான்றிதழ், இலவச வீட்டுமனைப் பட்டா, கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின்கீழ், வீடு வழங்குவது போன்ற பல்வேறு துறை சார்ந்த அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.
அதனடிப்படையில், தமிழக வனத்துறை அமைச்சர் அறிவுறுத்தலின்படி, தற்போது, டி.எடையார் கிராமத்தைச் சேர்ந்த 28 இருளர் பழங்குடியினர் மக்களுக்கு சாதிச் சான்றிதழ் வழங்கப்பட்டது.
மேலும், டி.எடையார் கிராமத்தில், குடிசைகளில் வசிக்கும் இருளர் என்ற பழங்குடியின மக்களுக்கு, துறை சார்ந்த அலுவலர்கள் மூலம் கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின்கீழ், வீடு கட்டிக்கொடுப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட கவுன்சிலர் விஸ்வநாதன், விழுப்புரம் ஆர்.டி.ஓ., முருகேசன், திருவெண்ணெய்நல்லுார், தாசில்தார் செந்தில்குமார் உட்பட பலர் உடனிருந்தனர்.