/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
செஞ்சி கோட்டை அகழியில் புதர்களை அகற்றாத அவலம்
/
செஞ்சி கோட்டை அகழியில் புதர்களை அகற்றாத அவலம்
ADDED : செப் 20, 2024 09:57 PM

செஞ்சி : செஞ்சி கோட்டையை உலக பாரம்பரிய நினைவு சின்னமாக அறிவிக்க யுனெஸ்கோ குழுவினர் ஆய்வுக்காக கோட்டைக்கு நேரில் வர உள்ள நிலையில் கோட்டையின் முகப்பில் உள்ள அகழிகளில் புதர்கள் அகற்றப்படாத அவலம் உள்ளது.
பாதுகாக்கப்பட்ட தேசிய நினைவு சின்னமாக உள்ள செஞ்சி கோட்டையை இந்திய தொல்பொருள் ஆய்வுத்துறையினரின் கட்டுப்பாட்டில் உள்ளது.
இந்த செஞ்சி கோட்டையை உலக பாரம்பரிய நினைவு சின்னமாக அறிவிக்க வேண்டும் என யுனெஸ்கோவிற்கு கடந்த 2011ம் ஆண்டு இந்திய தொல்லியல் துறை பரிந்துரை செய்தது.
இந்நிலையில் மத்திய அரசு யுனெஸ்கோவிற்கு சத்ரபதி சிவாஜயின் ஆட்சியின் கீழ் இருந்த 11 கோட்டைகளை உலக பாரம்பரிய நினைவு சின்னமாக அறிவிக்க பரிந்துரை செய்துள்ளது.
இதில் 10 கோட்டைகள் மகாராஷ்டிராவிலும், தமிழகத்தில் செஞ்சி கோட்டையும் உள்ளன.
யுனெஸ்கோ குழு உலக பராரம்பரிய நினைவு சின்னமாக அறிவிப்பதற்கு யுனெஸ்கோவின் விதிமுறைகள் படி செஞ்சி கோட்டை உள்ளதா என ஆய்வு செய்ய வரும் 27ம் தேதி இதற்கான ஆய்வு குழுவினர் செஞ்சி கோட்டைக்கு வர உள்ளனர்.
இதற்காக செஞ்சி கோட்டையில் பல இடங்களில் இதுவரை புதர் மண்டி இருந்த இடங்களை சுத்தம் செய்து வருகின்றனர். ராஜகிரி கோட்டையில் இரண்டாவது அகழியில் இருந்த புதர்களை அகற்றி சுத்தம் செய்துள்ளனர்.
ஆனால் செஞ்சி கோட்டையின் நுழைவு முகமாக விளக்கும் திருவண்ணாமலை ரோட்டில் 80 அடி அகலத்தில் உள்ள பிரதான அகழிகளை கண்டு கொள்ளாமல் விட்டுள்ளனர். செஞ்சி கோட்டைக்கு வரும் யுனெஸ்கோ குழுவினரின் பார்வையில்படும் முதல் இடமாக உள்ள அகழிகள் புதர் மண்டியும், மதில் சுவர்கள் செடி கொடிகள் வளர்ந்தும் இருப்பது குழுவினர் மத்தியில் நல் எண்ணத்தை ஏற்படுத்தாது.
எனவே குறைந்த பட்சம் 100 மீட்டர் துாரத்திற்காவது அகழிகளில் உள்ள செடி கொடிகளை அகற்றியும், கோட்டை மதில்களில் உள்ள புதர்களை அகற்ற இந்திய தொல்லியல் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.