/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
தேசிய திறனாய்வுத் தேர்வில் வெற்றி மாணவர்கள், பயிற்சி ஆசிரியர்களுக்கு பாராட்டு
/
தேசிய திறனாய்வுத் தேர்வில் வெற்றி மாணவர்கள், பயிற்சி ஆசிரியர்களுக்கு பாராட்டு
தேசிய திறனாய்வுத் தேர்வில் வெற்றி மாணவர்கள், பயிற்சி ஆசிரியர்களுக்கு பாராட்டு
தேசிய திறனாய்வுத் தேர்வில் வெற்றி மாணவர்கள், பயிற்சி ஆசிரியர்களுக்கு பாராட்டு
ADDED : ஜன 19, 2024 07:37 AM

தேசிய திறனாய்வுத் தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்கள் மற்றும் பயிற்சி அளித்த ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா நடந்தது.
கள்ளக்குறிச்சி அடுத்த அ.புத்தந்துார் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி தலைமையாசிரியர் திருமலை குமார் கூறியதாவது:
தேசிய திறனாய்வுத் தேர்வுக்கு அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் 8ம் வகுப்பு மாணவர்கள் விண்ணப்பிக்கத் தகுதியுடையவர்.
தேர்வில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு 9ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு முடிக்கும் வரை மாதம் 1,000 ரூபாய் வீதம் 4 ஆண்டுகளில் 48 ஆயிரம் ரூபாய் மத்திய அரசால், அவர்களின் வங்கிக் கணக்கிற்கு நேரடியாக செலுத்தப்படும்.
கடந்த கல்வியாண்டில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 3,500 மாணவர்கள் மட்டுமே விண்ணப்பித்தனர். இதில் நடுநிலைப் பள்ளிகளில் 40 பேர், மேல்நிலைப் பள்ளிகளில் 54 பேர் என மொத்தம் 94 பேர் தேர்வாகி கல்வி உதவித் தொகைக்கு தகுதி பெற்றனர்.
இதனை கருத்தில் கொண்டு இக்கல்வியாண்டில் விண்ணப்பிப்போர் எண்ணிக்கை மற்றும் தேர்ச்சி விகித்தை அதிகரிக்கும் நோக்கத்தோடு மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் ஜோதிமணியின் சீரிய முயற்சியாலும், வட்டார கல்வி அலுவலர், ஆர்வமிக்க ஆசிரியர்களின் ஒத்துழைப்பினால் 8,500 மாணவர்கள் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளனர்.
இதில் சிறந்த மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு திறன்மிகு அனுபவமுள்ள ஆசிரியர்களைக் கொண்டு நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது.
கடந்த கல்வியாண்டில் தேசிய திறனாய்வு தேர்வில் தேர்ச்சி பெற்ற நடுநிலைப் பள்ளி மாணவர்கள் மற்றும் பயிற்சியளித்த ஆசிரியர்களை ஊக்குவிக்கும் பொருட்டு பாராட்டு விழா நடந்தது.
கள்ளக்குறிச்சி மாவட்ட கல்வி அலுவலகத்தில் நடந்த விழாவில் சி.இ.ஓ., முருகன், மாவட்ட கல்வி அலுவலர்கள் ஜோதிமணி, ஆரோக்கியசாமி, துரைராஜ் ஆகியோர் பங்கேற்று மாணவர்களுக்கு கேடயம், பதக்கம், சான்றிதழ், பயிற்சியளித்த ஆசிரியர்களுக்கு நினைவுப் பரிசு வழங்கினர். விழாவில் வட்டார கல்வி அலுவலர்களும் பங்கேற்றனர்.
விழாவிற்கு ஆஸ்திரேலியா சுயம்பு குடும்ப அறக்கட்டளை செயலாளர் சுகந்தி நிதியுதவி வழங்கி ஊக்குவித்தார்.
மேலும், இக்கல்வியாண்டில் பயிலும் மாணவர்கள் தேசிய திறனாய்வு தேர்விற்கு தயாராக 50 பயிற்சி புத்தகங்களை நன்கொடையாக வழங்கி தனது பங்களிப்பினை செய்தார். தேசிய திறனவாய்வு தேர்வின் வெற்றி சதவீதம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இவ்வாறு தலைமையாசிரியர் திருமலை குமார் கூறினார்.

