UPDATED : அக் 13, 2026 05:38 PM
ADDED : அக் 13, 2026 05:36 PM
விழுப்புரம்: அடையாள அட்டை வழங்கிட கோரி, தமிழ்நாடு சுமைப்பணி தொழிலாளர் சம்மேளனம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
விழுப்புரம் சென்னை நெடுஞ்சாலையில் உள்ள தமிழ்நாடு சேமிப்பு கிடங்கு முன் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, சி.ஐ.டி.யு., மாவட்ட தலைவர் குமார் தலைமை தாங்கினார்.
செயலாளர் முத்துக்குமரன் முன்னிலை வகித்தார். டாஸ்மாக் குடோன் சுமைப்பணி தொழிலாளர் சங்க மாவட்ட தலைவர் மணிகண்டன், செயலாளர் இளவரசன், சம்மேளன மாநிலக்குழு உறுப்பினர் அய்யப்பன் ஆகியோர் கோரிக்கைகள் குறித்து விளக்கவுரை ஆற்றினர்.
கடந்த இரு ஆண்டுகளாக கூலி வழங்காமல் அனைத்து மதுபான பெட்டிகளையும் ‘ஸ்கேன்’ செய்து வரும் பணிக்கு டாஸ்மாக் நிர்வாகம் ஏற்று கொண்டபடி கூலியை நிர்ணயித்து உடனே வழங்கிட வேண்டும். சட்டப்படியான ஆண்டு போனஸ் தீபாவளி பண்டிகைக்கு 10 நாட்களுக்கு முன் வழங்க நடவடிக்கை எடுத்தல், அனைத்து டாஸ்மாக் குடோன்களிலும் சுகாதாரமான குடிதண்ணீர் கிடைக்க ஏற்பாடு செய்தல் உள்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
