ADDED : மார் 16, 2026 04:12 AM

திருவெண்ணெய்நல்லுார்: திருவெண்ணெய்நல்லுார் அருகே சிற்றேரியை காணவில்லை என கிராம மக்கள் சார்பில் பொது இடங்களில் ஒட்டப்பட்ட போஸ்டரால் பரபரப்பு நிலவியது.
திருவெண்ணெய்நல்லுார் அடுத்த சித்தானங்கூர் ஊராட்சிக்குட்பட்ட மாமந்துார் கிராமத்தில் ஊராட்சி துறை கட்டுப்பாட்டில் 5 எக்டர் 62 ஏர்ஸ் பரப்பளவு கொண்ட சிற்றேரி உள்ளது.
மழைக்காலங்களில் விவசாய நிலத்தில் நீர் பிடிப்பின்போது ஏரி நிரம்பி நிலத்தடி நீர் மட்டம் அதிகரித்து வந்தது. இது மட்டுமல்லாமல் சிற்றேரியில் வற்றாமல் தண்ணீர் இருப்பதால் கால்நடைகளுக்கு மிகவும் பயன்னுள்ளதாக இருந்து வந்தது.
ஊராட்சி கட்டுப்பாட்டில் இருந்த சிற்றேரியை அப்பகுதியில் உள்ள சிலர் ஆக்கிரமிப்பு செய்து முழுதும் விவசாய நிலமாக மாற்றியுள்ளனர். இதனால் மழைக்காலங்களில் விவசாய நிலத்தில் நீர் பிடிப்பின்போது பயிர்கள் சேதமாகி வருவது தொடர்கதையாக உள்ளது.
ஆக்கிரமிப்புகளை அகற்றகோரி அப்பகுதி மக்கள் பல முறை பி.டி.ஓ., அலுவலகத்தில் மனு அளித்தும் அதிகாரிகள் அதனை கண்டுக்கொள்ளாமல் அலட்சிய போக்கில் இருந்து வருகின்றனர்.
இதனால், ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் 'ஐயையோ காணவில்லை' என்ற தலைப்பில் 'வருவாய்த் துறையே, உள்ளாட்சித் துறையே காணாமல் போன சிற்றேரியை கண்டுபிடித்துக் கொடு' இப்படிக்கு மாமந்துார் கிராம பொது மக்கள் என அச்சடிக்கப்பட்ட போஸ்டரை கிராம பகுதிகளில் ஒட்டியுள்ளனர்.
திருவெண்ணெய்நல்லுார் பஸ் நிறுத்தம், தாலுகா அலுவலகம், பி.டி.ஓ., அலுவலகம், காவல் நிலையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளதால் பரபரப்பு நிலவியது.
