/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கு பணிகள்
/
மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கு பணிகள்
ADDED : அக் 09, 2025 11:35 PM

விழுப்புரம்; மாவட்டத்தில் சட்டம்-ஒழுங்கு பிரச்னை ஏற்படாத வகையில், தொடர் கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ள கலெக்டர் அறிவுறுத்தினார்.
விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் சாலை பாதுகாப்பு மற்றும் சட்டம் ஒழுங்கு குழுக்கூட்டம் நடைபெற்றது.
கலெக்டர் ஷேக் அப்துல் ரஹ்மான் தலைமை தாங்கினார். எஸ்.பி., சரவணன், சப் கலெக்டர் ஆகாஷ் உட்பட அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர். இதில், விழுப்புரம் மாவட்டத்தில் சாலை பாதுகாப்பு தொடர்பாக மேற்கொள்ளும் பாதுகாப்பு நடவடிக்கைகள், கண்காணிப்பு பணிகள் குறித்து கலெக்டர், அலுவலர்களிடம் கேட்டறிந்தார்.
மாவட்டத்தில் தற்போது வரை சாலை விபத்துகளில் இறந்தோர், பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை குறித்தும், விபத்திற்கான காரணங்கள், அப்பகுதிகளில் விபத்து நடக்காமல் தடுக்க மேற்கொண்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் கேட்டறியப்பட்டது.
இதில் கலெக்டர் ஷேக் அப்துல் ரஹ்மான் கூறியதாவது:
மாவட்டத்தில் தேசிய நெடுஞ்சாலைகளில் நடக்கும் உயர்மட்ட மேம்பாலம், சாலை அமைக்கும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்.
பணிகள் நடப்பது சம்பந்தமாக வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அறியும் வகையில், 100 மீட்டருக்குள்ளே, எச்சரிக்கை தகவல் பலகைகளை அமைத்திட வேண்டும். போக்குவரத்து பாதிக்காத வகையில் சர்வீஸ் சாலைகள் நல்ல முறையில் இருப்பதை அலுவலர்கள் உறுதி செய்ய வேண்டும்.
பஸ்கள் தேசிய நெடுஞ்சாலையில் நிறுத்தி பயணிகளை இறக்கி ஏற்றுவதால் போக்குவரத்து பாதிப்பும், விபத்தும் ஏற்பட வாய்ப்புள்ளது. பஸ்கள் சர்வீஸ் சாலைகளில் வந்து பயணிகளை இறக்கி ஏற்றிய பின், மீண்டும் தேசிய நெடுஞ்சாலையில் செல்ல அரசு பஸ் ஓட்டுநர்களுக்கு அறிவுரை வழங்கி தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும். விபத்து ஏற்படும் பகுதிகளில் வட்டார போக்குவரத்து அலுவலர், போலீசார், நெடுஞ்சாலை துறை பொறியாளர் கூட்டாக பார்வையிட்டு விபத்துக்கான காரணத்தை ஆய்வு செய்து மீண்டும் விபத்து ஏற்படாமல் இருப்பதற்கான பணிகளை செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதைத்தொடர்ந்து மாவட்டத்தில் சட்டம்-ஒழுங்கு பிரச்னை ஏற்படாத வகையில், தொடர் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட அறிவுரை வழங்கப்பட்டது.
பள்ளி, கல்லுாரி மாணவர்களிடம் போதை பொருட்களை பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த அறிவுறுத்தப்பட்டது.
போலீசார், உணவு பாதுகாப்பு அலுவலர்கள், சுகாதார ஆய்வாளர்கள், உள்ளாட்சி துறை அலுவலர்களோடு தடை செய்த பொருட்கள் விற்பனை செய்வது தொடர்பாக ஆய்வு செய்ய வேண்டும். விற்பனை செய்வோர் மீது தக்க நடவடிக்கை மேற்கெள்ள வேண்டும் என கலெக்டர் அறிவுறுத்தினார்.