/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
12 ஆண்டுகளாக தொடரும் 100 சதவீதம் தேர்ச்சி; மலையரசன்குப்பம் அரசு உயர்நிலை பள்ளி சாதனை
/
12 ஆண்டுகளாக தொடரும் 100 சதவீதம் தேர்ச்சி; மலையரசன்குப்பம் அரசு உயர்நிலை பள்ளி சாதனை
12 ஆண்டுகளாக தொடரும் 100 சதவீதம் தேர்ச்சி; மலையரசன்குப்பம் அரசு உயர்நிலை பள்ளி சாதனை
12 ஆண்டுகளாக தொடரும் 100 சதவீதம் தேர்ச்சி; மலையரசன்குப்பம் அரசு உயர்நிலை பள்ளி சாதனை
ADDED : ஜூன் 14, 2025 09:57 PM

செஞ்சி ஒன்றியம், மலையரசன்குப்பம் அரசு உயர்நிலைப்பள்ளி பத்தாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில், 12 ஆண்டுகளாக தொடர்ந்து 100 சதவீதம் தேர்ச்சி பெற்று விழுப்புரம் மாவட்ட அளவில் அரசு பள்ளிகளில் முதலிடம் வகித்து வருகிறது.
விழுப்புரம் மாவட்டத்தில் மழவந்தாங்கல் ஊராட்சியின் துணை கிராமமாக மலையரசன் குப்பம் கிராமம் உள்ளது. காடும், மலையும், ஏரியும் சூழ்ந்த எழில் நிறைந்த கிராமத்தில் 50 ஆண்டுளுக்கு முன் ஆரம்ப பள்ளியாக துவங்கப்பட்டது.
2007ம் ஆண்டு நடுநிலைப் பள்ளியாகவும், 2012ம் ஆண்டு உயர்நிலைப் பள்ளியாகவும் தரம் உயர்த்தப்பட்டது. இந்த பள்ளியில் 6ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை தற்போது 120க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். மூன்று பட்டதாரி ஆசிரியர்களும், 2 தற்காலிக ஆசிரியர்களும், கணினி ஆசிரியர் ஒருவரும், அலுவலக பணியாளர் ஒருவரும் பணிபுரிந்து வருகின்றனர்.
இந்த பள்ளி மாணவர்கள் 10ம் வகுப்பு பொதுத் தேர்வில் 2014ம் ஆண்டில் இருந்து 2025ம் ஆண்டு வரை தொடர்ந்து 12 ஆண்டுகளாக 100 சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்து வருகின்றனர். 2023-24ம் கல்வி ஆண்டில் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 233 அரசு பள்ளிகளில் இப்பள்ளி 100 தேர்ச்சி பெற்றதுடன், சராசரி மதிப்பெண் அடிப்படையில் மாவட்ட அளவில் முதலிடமும், மாநில அளவில் 5ம் இடமும் பிடித்துள்ளது.
கடந்த 2013ம் ஆண்டில் இருந்து ஆங்கில பாடத்தில் தொடர்ச்சியாக 13 ஆண்டுகள் முழு அளவில் தேர்ச்சியை கொடுத்ததால் இப்பள்ளிக்கு கல்வித்துறை சார்பில் சான்று வழங்கப்பட்டுள்ளது.
இப்பள்ளியில் 12 கம்ப்யூட்டர்கள் உள்ளன. இதன் மூலம் மாணவர்கள் அனைவருக்கும் அடிப்படை கணினி பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. மாணவர்களின் ஒழுக்க சிந்தனையை மேம்படுத்த ஒவ்வொரு மாதமும் அரசு சார்பில் வெளிவரும் சிறார்களுக்கான திரைப்படங்களை திரையிடப்படுகிறது. தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் மன்றங்கள் செயல்பட்டு வருகிறது.
இப்பள்ளியில் மொழிகள் ஆய்வகம், நுாலகம், அறிவியல் ஆய்வகம், மாணவர்கள் விளையாடுவதற்கு விளையாட்டுத் திடல் உள்ளிட்ட வசதிகள் உள்ளன. இதுவரை நடந்த தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்பு தேர்வில் இப்பள்ளியைச் சேர்ந்த 17 மாணவர்கள் 4 ஆண்டுகளுக்கு தலா 2000 வீதம் மத்திய அரசு ஊக்கத்தொகை பெற்று வருகின்றனர்.
சரியான பஸ் வசதியும், போக்குவரத்து வசதியும் இல்லாத இந்த கிராமத்தில் 20 ஆண்டுகளுக்கு முன் உயர்நிலை பள்ளி இல்லாததால் மாணவர்கள், உயர்நிலை பள்ளி படிப்பபையும், உயர் கல்வி வாய்ப்பையும் இழந்திருந்தனர்.
இதனால் 20 ஆண்டுகளுக்கு முன்பு வரை குறிப்பிடும் படியாக யாரும் அரசு பணியில் இல்லை. தற்போது உயர்நிலை பள்ளியாக தரம் உயர்த்தப்பட்ட பின் இதில் படித்து சென்ற மாணவர்கள் உயர் கல்வியை முடித்து தொழிலதிபர்களாகவும் மேலும் காவல்துறை, வருவாய்த்துறை, ராணுவம், மருத்துவம் மற்றும் கல்வித்துறையில் அரசு பணிகளில் உள்ளனர்.
பள்ளியில் பயின்று தற்போது சென்னையில் பில்டர்ஸ் மற்றும் ஏற்றுமதி தொழிலில் ஈடுபட்டுள்ள தொழிலதிபர் பொன்னுசாமி கார்த்திக் நேற்று முன்தினம் இப்பள்ளியில் பயிலும் மாணவர்களை ஊக்கப்படுத்தவும், மாணவர்களிடையே சேவை மனப்பாண்மை ஏற்படுத்தவும் பள்ளிக்கு ஒரு லட்சம் ரூபாய் மதிப்பில் நோட்டு, புத்தகம், கல்வி உபகரணம், விளையாட்டு பொருட்களை சீர்வரிசையாக மாட்டு வண்டியில் கொண்டு வந்து பொறுப்பாசிரியர் ரமேஷிடம் ஒப்படைத்தார்.
இந்த விழாவின் போது பள்ளி வளாகத்தில் ரத்ததான முகாம், பொது மருத்துவ முகாம், விவசாயிகளுக்கு விதை நெல் வழங்கப்பட்டது. இப்பள்ளியில் படித்த மாணவர்கள் பள்ளியில் மீது காட்டும் அக்கரையின் காரணமாகவும், ஆசிரியர்களின் உழைப்பினாலும் எதிர் காலத்தில் இப்பள்ளி மாணவர்கள் உயர் கல்விக்கு செல்வதுடன் நிச்சயம் கிராமத்திற்கு பெருமை சேர்க்கும் சாதனையாளர்களாக வருவார்கள்.