/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
விழுப்புரம் மாவட்டத்தில் மாம்பழங்கள் வரத்து துவங்கியது: உணவு பாதுகாப்பு துறையினர் கண்காணிக்க வேண்டும்
/
விழுப்புரம் மாவட்டத்தில் மாம்பழங்கள் வரத்து துவங்கியது: உணவு பாதுகாப்பு துறையினர் கண்காணிக்க வேண்டும்
விழுப்புரம் மாவட்டத்தில் மாம்பழங்கள் வரத்து துவங்கியது: உணவு பாதுகாப்பு துறையினர் கண்காணிக்க வேண்டும்
விழுப்புரம் மாவட்டத்தில் மாம்பழங்கள் வரத்து துவங்கியது: உணவு பாதுகாப்பு துறையினர் கண்காணிக்க வேண்டும்
ADDED : ஏப் 29, 2025 06:32 AM

தமிழகத்தில் முக்கனிகளில் ஒன்றான சுவை தரும் மாம்பழம் விளைச்சல், ஆண்டுதோறும் ஏப்ரல் மாதம் துவங்கி மூன்று மாதங்கள் வரை விளைந்து, மக்கள் பயன்பாட்டுக்கு விற்பனைக்கு வருகிறது. இந்தாண்டு மாம்பழங்கள் விற்பனை சீசன் தற்போது துவங்கி உள்ளது.
விழுப்புரம் மாவட்டத்தில் பரவலாக மாம்பழங்கள் விற்பனைக்கு வர துவங்கி உள்ளது. மார்க்கெட் வீதிகளான காந்தி வீதி, பாகர்ஷா வீதி, திரு.வி.க. வீதி உள்ளிட்ட இடங்களில் மொத்த விற்பனை கடைகள், சில்லறை கடைகளில் மாம்பழம் குவிக்கப்பட்டு வருகின்றன. ஏராளமான பொதுமக்களும் வாங்கி செல்கின்றனர்.
மாம்பழங்கள் வரத்து குறித்து, விழுப்புரம் வியாபாரிகள் வீரமணி, ஏழுமலை கூறியதாவது:
விழுப்புரத்திற்கு கடந்த 15ம் தேதி முதல் மாம்பழம் வரத்து துவங்கியது. வழக்கமாக ஏப்ரல் மாதத்தின் முதல் வாரத்திற்கு பிறகு மாம்பழங்கள் வரத்தொடங்கும். முதலில் வெளி மாநில மாம்பழங்கள் வரத்தும், அதன் பிறகு மே மாதம் துவக்கத்தில் உள்ளூர் மாம்பழங்கள் வரத்தும் என அனைத்து விதமான மாம்பழங்கள் விற்பனைக்கு வரும்.
தற்போது மாம்பழங்கள் வருவது குறைவாக இருப்பதால், அதன் விலையும் சற்று உயர்ந்துள்ளது. இன்னும் 10 நாள்களில் அனைத்து விதமான மாம்பழங்களும் விற்பனைக்கு வரும்போது விலை குறையும்.
விழுப்புரம் மாவட்டத்திற்கு சேலம், ராசிபுரம், சேந்தமங்கலம், தேனி மாவட்டம் போடி, ஆந்திரா மற்றும் கர்நாடகா பகுதியில் இருந்தும் மாம்பழங்கள் வருகிறது. தற்போது வெளிமாநில மாம்பழங்கள் வரத்து துவங்கி உள்ளது. பங்கன பள்ளி ரகம் கிலோ 100 ரூபாய் முதல் 140 ரூபாய் வரைக்கும், அல்போன்சா 180 முதல் 200 ரூபாய் வரையும், இமாம் பசந்த் 200 ரூபாய்க்கும், ஆந்திராவின் ருமேனியா 100 ரூபாய்க்கும், மல்கோவா 200 ரூபாய், கர்நாடகா பல்லிகா 120 முதல் 140 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
அடுத்த இரண்டு வாரங்களில் சுவை மிகுந்த உள்ளூர் நீலம் மாம்பழம், ஒட்டு மாம்பழம் போன்றவை அதிகளவில் வரும். அப்போது, மாம்பழங்கள் விலை குறைந்து அனைத்து கடைகளிலும் கிடைக்கும் என கூறினர்.
கண்காணிப்பு ேவண்டும்
வழக்கம்போல் மாம்பழங்கள் சீசன் துவங்கியுள்ள நிலையில், மாம்பழங்களை பழுக்க வைப்பதற்காக, சில வியாபாரிகள் மாம்பழ குடோன்களில் கார்பைடு கல் ரசாயனம் பயன்படுத்தி பழுக்க வைப்பதாக புகார் வருகிறது. இதனால் உணவு பாதுகாப்பு துறையினர், ஆரம்பத்திலேயே வியாபாரிகளிடம் எச்சரிக்கை விடுத்து, குடோன்களில் சோதனை நடத்தி கார்பைடு கல் ரசாயனம் கலப்பில்லாத தரமான மாம்பழங்கள் விற்பனையை உறுதி செய்ய வேண்டும்.