/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
கோடை வெயிலை சமாளிக்க மருத்துவ நிபுணர்கள் ஆலோசனை
/
கோடை வெயிலை சமாளிக்க மருத்துவ நிபுணர்கள் ஆலோசனை
ADDED : ஏப் 28, 2025 04:55 AM
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் கோடை வெயிலின் தாக்கத்திலிருந்து காத்துக் கொள்ள மருத்துவ நிபுணர்கள் ஆலோசனைகளை வழங்கியுள்ளனர்.
விழுப்புரத்தில் சில தினங்களாக வெயில் அதிகரித்துள்ளது. வெயிலில் இருந்து காத்துக் கொள்ள வெளியே வருவோர் குடை, தொப்பிகள் அணிந்து வருகின்றனர்.
இந்நிலையில், பொதுமக்கள், சிறுவர்கள், வயதானோருக்கு தேவையான சில மருத்துவ ஆலோசனைகளை மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
அதில், போதுமான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும். மதிய நேர வெயிலில் வெளியே செல்வதை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும். தேவைப்பட்டால் வெயிலின் தாக்கம் குறைவாக இருக்கும் நேரங்களில் வெளியே செல்லலாம்.
தினமும் 3 முதல் 4 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும். வெளிர்நிற பருத்தி ஆடைகளை அணிந்து வெயிலின் தாக்கத்தை தவிர்க்கலாம். வெயிலில் அதிக நேரம் செலவிடுவதை தவிர்ப்பதோடு, வீட்டிற்கு வந்ததும் குளித்து உடலை குளிர்ச்சியாக வைத்து கொள்ள வேண்டும்.
உடலில் உப்புசத்து, நீர்சத்து பற்றாக்குறை ஏற்படாமல் பார்த்து கொள்ள வேண்டும். அதிக வியர்வை வெளியேறுவதை தடுக்க வேண்டும். தோல் நோய்களைத் தவிர்க்க கோடையில் ஜீன்ஸ், லெகிங்ஸ் அணிய கூடாது.
அதிகமான வெப்பம் நிலவும் காலங்களில் சிறுநீர் தொற்று, அம்மை நோய், செரிமான பிரச்னை ஆகிய வயிற்று கோளாறுகள், தொண்டை அழற்சி, சரும நோய்கள் உள்ளிட்ட பல பாதிப்பு ஏற்பட வாய்ப்புகள் உள்ளன.
வயதானோரும் வெயிலால் உடல் பலவீனமடைந்து 'ஹீட் ஸ்ட்ரோக்' என்ற வெப்பத்திற்கான நோய் வரக்கூடும். நடுத்தர வயதை சேர்ந்தோருக்கு சிறுநீரக பிரச்னைகளும், குழந்தைகளுக்கு தொண்டையில் பாதிப்புகள் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம் உள்ளன.
வெப்பம் அதிகமான காலங்களில் இளநீர், மோர், நன்னாரி சர்பத் ஆகிய ஆரோக்கிய இயற்கை பானங்களை அருந்த வேண்டும். தர்பூசணி, வெள்ளரி பழங்களை சாப்பிடலாம்.
வெயிலால் மலச்சிக்கல், வயிற்றுபோக்கு, அல்சர் பிரச்னைகளும் வரக்கூடும். இதை சரிசெய்ய நார்சத்து அதிகமுள்ள முழுதானிய உணவுகள், காய்கறிகள், பருப்பு வகைகள், நீர்சத்து நிறைந்த பழவகைகளை அதிகமாக சாப்பிட வேண்டும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

