ADDED : ஆக 24, 2026 06:13 PM
செஞ்சி: செஞ்சி அடுத்த ஆலம்பூண்டியில் பால் உற்பத்தியாளர்கள் பாலை தரையில் கொட்டி ஆர்ப்பாட்டம் செய்தனர்.
ஆலம்பூண்டி பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கம் முன் பால் உற்பத்தியாளர்கள் பால் நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். பால் உற்பத்தியாளர் நலச் சங்கத் தலைவர் குண்டு ரெட்டியார் தலைமை தாங்கினார்.
ஆர்ப்பாட்டத்தில், பால் கொள்முதல் விலையை லிட்டருக்கு 45 ரூபாயாக உயர்த்த வேண்டும், அரசு வழங்கும் ஊக்கத்தொகையை 3 ரூபாயில் இருந்து 6 ரூபாயாக உயர்த்த வேண்டும். கறவை மாட்டு தீவனங்களை 50 சதவீத மானியத்தில் வழங்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
போராட்டத்தின் ஒரு பகுதியாக கொண்டு வந்த பாலை கீழே ஊற்றி எதிர்ப்பை தெரிவித்தனர். இதனால் ஆலம்பூண்டி பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தில் வழக்கத்தைவிட பால் கொள்முதல் குறைந்தது. போராட்டம் காரணமாக நேற்று காலை மட்டும் 300 லிட்டர் பால் கொள்முதல் குறைந்தது.
