மருத்துவ சிகிச்சைக்கு 20 கி.மீ., துாரம் செல்லும் அவலம்:தமிழக அரசு முற்றுப்புள்ளி வைக்க கோரிக்கை
மருத்துவ சிகிச்சைக்கு 20 கி.மீ., துாரம் செல்லும் அவலம்:தமிழக அரசு முற்றுப்புள்ளி வைக்க கோரிக்கை
UPDATED : ஆக 19, 2026 06:43 PM
ADDED : ஆக 19, 2026 06:30 PM

செஞ்சி: பெருவளூரில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க கடந்த, 10 ஆண்டுகளாக கோரிக்கை நீடித்து வருவதால், அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மேல்மலையனூர் தாலுகாவில் அதிக மக்கள் தொகை கொண்ட கிராமங்களில் பெருவளூரும் ஒன்று. இங்கு 8 ஆயிரம் பேர் வசிக்கின்றனர்.
பெருவளூரை சுற்றி மரக்கோணம், தேவந்தவாடி, கூடுவாம்பூண்டி, வடவெட்டி, காரணி, கீழ்செவலாம்பாடி, பாப்பந்தாங்கல், சூரப்பன்தாங்கல், சொக்கப்பள்ளம் உள்ளிட்ட, 15க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இவற்றில் 20 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் வசிக்கின்றனர்.
விவசாயம் மற்றும் நெசவு பிரதான தொழிலாக உள்ள இப்பகுதியில், போதிய பஸ் வசதி இல்லாததால் மருத்துவ சிகிச்சைக்காக வெளியூர் செல்வதே மக்களின் முக்கிய பிரச்னையாக உள்ளது.
சாதாரண காய்ச்சல் முதல் விபத்து, பிரசவம் உள்ளிட்ட அவசர சிகிச்சை வரை, 14 கி.மீ., தொலைவில் உள்ள வளத்தி அல்லது 20 கி.மீ., தொலைவில் உள்ள மேல்செவலாம்பாடி ஆரம்ப சுகாதார நிலையத்திற்குச் செல்ல வேண்டியுள்ளது.
பெருவளூரில், 30 ஆண்டுகளுக்கு முன் துணை சுகாதார நிலையம் தொடங்கப்பட்டது. செவிலியர்கள் அங்கு தங்கி கர்ப்பிணிகள் மற்றும் குழந்தைகளுக்கு தடுப்பூசி உள்ளிட்ட சிகிச்சை பணிகளை மேற்கொண்டனர்.
கட்டடம் பழுதடைந்ததால் இரு ஆண்டுகளுக்கு முன் இடிக்கப்பட்டது. அதன் பிறகு இப்பகுதி மக்களுக்கு அருகில் மருத்துவ சேவை வழங்கும் துணை சுகாதார நிலையமும் இல்லாமல் போனது.
தாமதத்தால் உயிரிழப்பு பஸ் மற்றும் வாகன வசதி இல்லாத நிலையில், இரவு நேரங்களில் அவசர சிகிச்சைக்காக தொலை துார மருத்துவமனைகளுக்கு செல்ல முடியாமல் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். உரிய நேரத்தில் சிகிச்சை கிடைக்காததால் உயிரிழப்புகளும் ஏற்பட்டதாக மக்கள் கூறுகின்றனர்.
கடந்த 2018ல் நீட் தேர்வில் மதிப்பெண் குறைந்ததால் மாணவி பிரதீபா விஷம் அருந்தியபோது, பெருவளூரில் முதலுதவி சிகிச்சை அளிக்க வசதி இல்லாததால் வெளியூருக்கு அழைத்து செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது.
இதனால் ஏற்பட்ட தாமதத்தால் அவரை காப்பாற்ற முடியவில்லை என குடும்பத்தினர் கூறுகின்றனர்.
மாவட்ட நிர்வாகம் பரிந்துரை பெருவளூரில் ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க வேண்டும் என கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக கிராம மக்கள் அரசிடம் தொடர்ந்து கோரிக்கை மனு கொடுத்து வருகின்றனர்.
இதையடுத்து கடந்த, 2 ஆண்டுக்கு முன்பு மாவட்ட மருத்துவ குழுவினர் கிராமத்தில் ஆய்வு நடத்தி, இங்கு ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க அரசுக்கு பரிந்துரை செய்தனர். கடந்த ஜூலை, 30ம் தேதி இரண்டாவது முறையாக அரசுக்கு பரிந்துரை கடிதம் அனுப்பியுள்ளனர்.
சட்டசபையில் எம்.எல்.ஏ., வலியுறுத்தல் செஞ்சி தொகுதி எம்.எல்.ஏ., கணேஷ்குமார், சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடர் விவாதத்தின் போது கடந்த, 7ம் தேதி மற்றும் 18ம் தேதியும் பெருவளூரில் ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க வேண்டியதின் அவசியத்தை வலியுறுத்தி பேசினார்.
அதனால், கடந்த 10 ஆண்டுகளாக நிறைவேற்றப்படாமல் உள்ள பெருவளூர் ஆரம்ப சுகாதார நிலைய கோரிக்கையை, தமிழக அரசு உடனடியாக நிறைவேற்றி, ஆயிரக்கணக்கான கிராம மக்களின் மருத்துவ பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
