/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
தீயணைப்புத் துறையில் நவீன உபகரணங்கள். இல்லை .. மீட்பு படையினருக்கு வழங்க நடவடிக்கை தேவை
/
தீயணைப்புத் துறையில் நவீன உபகரணங்கள். இல்லை .. மீட்பு படையினருக்கு வழங்க நடவடிக்கை தேவை
தீயணைப்புத் துறையில் நவீன உபகரணங்கள். இல்லை .. மீட்பு படையினருக்கு வழங்க நடவடிக்கை தேவை
தீயணைப்புத் துறையில் நவீன உபகரணங்கள். இல்லை .. மீட்பு படையினருக்கு வழங்க நடவடிக்கை தேவை
ADDED : மார் 07, 2026 04:36 AM

செஞ்சி: விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர் துரிதமாக மீட்பு பணிகளை மேற்கொள்ள தேவையான நவீன மற்றும் அடிப்படையான உபகரணங்களை வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகத்தில் வேகமாக வளர்ந்து வரும் மாவட்டமாகவும், மிக நீளமான தேசிய நெடுஞ்சாலையைக் கொண்ட மாவட்டமாகவும் விழுப்புரம் மாவட்டம் உள்ளது. இங்குள்ள மேல்மலையனுார் அங்காளம்மன் கோவில், மயிலம் முருகன் கோவில், திருவக்கரை சந்திரமவுலீஸ்வரர் கோவில்களில் நடக்கும் விழாக்களில் ஒரே நாளில் பல லட்சம் பக்தர்கள் பங்கேற்கின்றனர்.
திண்டிவனத்தில் சிப்காட், வானுாரில் மினி டைடல் பார்க், மாவட்டம் முழுதும் உள்ள நகரங்களில் அதிக அளவிலான புதிய வர்த்தக நிறுவனங்கள்,, பிரம்மாண்டமான ஜவுளி கடைகள் உருவாகிஉள்ளன.
அடர்த்தியான மக்கள் தொகை கொண்ட மாவட்டமாக இருப்பதால் முக்கிய சாலைகளில் எப்போதும் போக்குவரத்து நெரிசல் காணப்படுகிறது. சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கும், ஊட்டி, கோயம்புத்துார், திருப்பூர் மற்றும் கேரளாவிற்கும் இந்த வழியாகவே வாகனங்கள் செல்கின்றன.
இத்தனை முக்கியத்துவம் வாய்ந்த விழுப்புரம் மாவட்டத்தில் தீ விபத்து, சாலை விபத்து, நீரில் மூழ்குபவர்கள், நெரிசலில் சிக்குபவர்களை மீட்பது என பல்வேறு சம்பவங்கள் அடிக்கடி ஏற்படுகிறது. இதுபோன்ற மீட்பு பணிகளில் தீயணைப்புத் துறையினர் ஈடுபடுகின்றனர்.
ஆனால், தீயை அணைக்க பயன்படுத்தப்படும் கார்பன் டை ஆக்சைடு வாயு சிலிண்டர் தீயணைப்பு மீட்பு குழுவினரிடம் இல்லை. அருகில் சென்று தீயை அணைக்க தீயை தாங்கும் கவச உடையும், நீளமான ஏணியும் இல்லை.
ஆலம்பூண்டியில் கார் கிணற்றில் விழுந்தபோது காரில் இருந்த டீசல் தண்ணீரில் கலந்து விட்டது. தீயணைப்பு மீட்பு படை வீரர்கள் தண்ணீரில் மூழ்கி காருடன் பெல்டை இணைத்து காரை மேலே எடுத்து வர பல மணி நேரம் போராடியும் கடைசி வரை முடியவில்லை.
பிறகு கிராமங்களில் பயன்படுத்தப்படும் பாதாள சுரடு என்ற கொக்கியை கொண்டு இரண்டரை மணி நேரம் போராடி காரை மேலே கொண்டு வந்தனர். இதே போல் கார் இடிபாட்டில் சிக்கியவர்களை மீட்க கட்டர் இல்லாமல் ஜே.சி.பி., இயந்திரத்தைக் கொண்டு இடிபாடுகளை அகற்றினர்.
காரில் இருந்த அனைவரும் இறந்ததால் ஜே.சி.பி.,யால் காரை உடைத்து உடல்களை மீட்க முடிந்தது. உயிருக்கு போராடிக் கொண்டிருந்தால் இந்த முறையில் மீட்பு பணிகளை செய்ய முடியாது.
சில ஆண்டுகளுக்கு முன் செஞ்சியில் பெட்ரோல் பங்க் ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டது. அப்போதும் தீயை அணைக்க மிகவும் சிரமப்பட்டனர். தற்போது மாவட்டம் முழுதும் மேலும் 50க்கும் மேற்பட்ட புதிய பெட்ரோல் பங்க்குகள் வந்துவிட்டன.
எனவே, மாவட்டம் முழுதும் உள்ள தீயணைப்பு நிலையங்களுக்கும் மீட்பு பணிக்கு தேவையான தீயணைப்பு சிலிண்டர்கள், தண்ணீரில் மூழ்கி மீட்பதற்கு ஆக்சிஜன் சிலிண்டர், சுவாச கருவிகள், தீக்குள் சிக்கியவர்களை மீட்க புகை மற்றும் தீ தாக்காத கவச உடைகள், பெரிய ஏணிகள், தலைக் கவசங்கள், கால்நடைகளை மீட்க வலைகள் உள்ளிட்ட அடிப்படை கட்டமைப்பை ஏற்படுத்தி விபத்து காலத்தில் துரிதமாக மீட்பு பணிகளை மேற்கொள்வதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

