ADDED : ஜூலை 17, 2025 12:25 AM
கோட்டக்குப்பம்: வானுார் விவசாயி வீட்டிற்குள் நுழைந்து பீரோவில் இருந்த ரூ. 1லட்சம் பணத்தை திருடிய ஆசாமிகளை போலீசார் தேடி வருகின்றனர்.
வானுார் அடுத்த ஆப்பிரம்பட்டு திரவுபதியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ஜெகதீசன் மகன் முனுசாமி, 42; விவசாயி. இவர் விவசாய செலவுகளுக்காக, நகைகளை அடகு வைத்து சமாளித்து, எஞ்சிய பணம், ரூ.1 லட்சத்தை தனது வீட்டின் பீரோவில் வைத்து விட்டு, அருகில் உள்ள மற்றொரு கூரை வீட்டில் சாவியை வைத்துள்ளார்.
அதன் பிறகு வயலுக்கு சென்றவர் மாலை 5:00 மணிக்கு திரும்ப வந்து பார்த்த போது, பீரோ திறக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
அவர் அதில் வைத்திருந்த ஒரு லட்சம் பணத்தை மர்ம ஆசாமிகள் திருடிச்சென்றிருப்பது தெரிய வந்தது.
இது குறித்து முனுசாமி, கோட்டக்குப்பம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.